சென்னையில் சிக்கிய வங்கதேசத்தினர் சிறையில் அடைப்பு
சென்னையில் சிக்கிய வங்கதேசத்தினர் சிறையில் அடைப்பு
ADDED : ஏப் 30, 2025 06:41 AM
சென்னை : சென்னையில், சட்ட விரோதமாக தங்கியிருந்து, டில்லி போலீசாரிடம் சிக்கிய வங்கதேசத்தினர், 33 பேரில், 25 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். எட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம், டில்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், அதே மாநிலத்தை சேர்ந்த, சந்த் மியா, 55 என்பவர் சிக்கினார்.
வங்கதேச நாட்டை சேர்ந்த பலர், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, டில்லி போலீசார், அவரை தமிழகம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி, சென்னை மாங்காடு மற்றும் குன்றத்துார் பகுதியில் பதுங்கி இருந்த, 13 ஆண்கள், 12 பெண்கள், எட்டு குழந்தைகள் என, 33 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தது உறுதியானதால், மாங்காடு மற்றும் குன்றத்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான நபர்களை, புழல் சிறையிலும், காப்பகத்திலும் மே, 12ம் தேதி வரை தங்கவைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, ஆண்கள், பெண்கள் என, 25 பேரை, புழல் சிறையில் அடைத்துள்ளனர். குழந்தைகள் எட்டு பேரையும், அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.