வங்கி ஏல மோசடி: 5 பேருக்கு தண்டனை உயர்நீதிமன்றம் உத்தரவு
வங்கி ஏல மோசடி: 5 பேருக்கு தண்டனை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 03, 2025 07:06 AM
மதுரை: வங்கி கடன் தொகையை செலுத்தாத நிறுவன சொத்துக்களை ஏலம் விட்டதில் முறைகேடு தொடர்பாக கடன் வசூல் தீர்ப்பாய அதிகாரி உள்ளிட்ட 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஒரு நிறுவனம் மதுரை தனியார் வங்கியில் கடன் வாங்கியது. கடனை செலுத்த முடியாததால் நிறுவன சொத்துக்களை ஏலத்திற்கு கொண்டுவர மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் மூலம் வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. 2008 ல் ஏலம் நடந்தது.
ஏல நிபந்தனைகளை மீறி தீர்ப்பாயத்தின் எழுத்தராக இருந்த செல்வராஜின் மனைவி அனிதா மற்றும் ராஜேஷ்கண்ணன் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
குறைந்த ஏல தொகையை நிர்ணயித்து வங்கி, நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய தீர்ப்பாய அதிகாரி காசிமாயன், செல்வராஜ், அனிதா, ராஜேஷ் கண்ணன், வங்கி மேலாளராக இருந்த வாகீஸ்வரன் மீது சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ.,நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. காசிமாயன் உள்ளிட்ட 5 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என அந்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ.,தரப்பு உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் 'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. காசிமாயன் உள்ளிட்ட 5 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது என நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

