ADDED : மே 13, 2025 04:31 AM

சென்னை; வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், வங்கி மேலாளருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துஉள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 48. இவரது மனைவி தீபா, 'பெடரல்' வங்கியில் பணிபுரிந்தார். ராஜாஜி சாலையில் உள்ள, 'ஸ்டாண்டர்ட் சார்ட்டட்' வங்கியில், 2009 ஆகஸ்ட், 3ல் இணை மேலாளராக ராஜேந்திரன் பணியில் சேர்ந்தார்; 2011 ஜூன் 1ல் மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.
இதன்பின், 2020 ஏப்., 1 முதல் 2021 பிப்., 18ம் தேதி வரையிலான காலத்தில், ராஜேந்திரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்படி, வங்கி மேலாளர் ராஜேந்திரன் மீது, 2021 டிச., 29ல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.
வங்கி பணியில் இருந்து, 2021 ஜூலை 16ல் நீக்கப்பட்ட ராஜேந்திரன் மீதான வழக்கு விசாரணை, சென்னை 8வது கூடுதல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சி.பி.ஐ., தரப்பில், மூத்த அரசு வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் லெனின் ராஜா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஈஸ்வரனே அளித்த தீர்ப்பில், ராஜேந்திரனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.