உயர்த்தப்பட்ட பயிர்க்கடன் அமல்படுத்த வங்கிகள் தயக்கம்
உயர்த்தப்பட்ட பயிர்க்கடன் அமல்படுத்த வங்கிகள் தயக்கம்
ADDED : ஜன 31, 2025 12:29 AM
மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்த பயிர்க்கடன் உயர்வை அமல்படுத்த, தொடக்க வேளாண் வங்கிகள் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த மாதம் ரிசர்வ் வங்கி, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், பெரும் பல்நோக்கு சங்கங்கள் போன்றவை, விவசாயி களுக்கு வழங்கும் குறுகிய கால பயிர்க்கடன், கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்கான நடைமுறை மூலதன கடன்களை, 2 லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அந்த சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை, 1.6 லட்சம் ரூபாய் என, வழங்கப்பட்ட பிணையமில்லா பயிர்க்கடன் உள்ளிட்ட கடன்களை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், இதுகுறித்து அனைத்து கூட்டுறவு வங்கிகளும், உரிய வகையில் விளம்பரப்படுத்தி விவசாயிகளுக்கு தெரிவிக்கவும் அறிவித்தது.
ஜனவரி முதல் இதை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், வங்கிகளில் உரிய ஊழியர்கள் இல்லை; வரும் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என, வங்கி அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மண்டல கூட்டுறவு பதிவாளர் பிரபு கூறுகையில், ''உயர்த்தப்பட்ட பயிர்க்கடன் வழங்குவது குறித்து, மத்திய கூட்டுறவு வங்கி கடிதம் அனுப்பியுள்ளது.
''மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும், சுற்றறிக்கையை பெற்றுக்கொண்டு, விளம்பரப்படுத்தி உள்ளதா என, அறிக்கை பெறப்படும். இந்த உத்தரவு முறையாக பின்பற்ற அனைத்து வங்கிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்,'' என்றார்.
-நமது நிருபர்-