அதிகாரிகளுக்கு ஏழரை ஆரம்பம்:சிறையில் தள்ள அதிரடி உத்தரவு
அதிகாரிகளுக்கு ஏழரை ஆரம்பம்:சிறையில் தள்ள அதிரடி உத்தரவு
UPDATED : பிப் 19, 2025 11:39 PM
ADDED : பிப் 19, 2025 11:35 PM

மதுரை :தமிழகத்தில், கோர்ட் தீர்ப்பை மதிக்காத அதிகாரிகளுக்கு, ஏழரை ஆரம்பமாகி உள்ளது. ஏற்கனவே பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கு, நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு, ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் ஹெலின் ரோனிகா ஜேசுபெல். இவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன்.
இப்பள்ளியில், ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர், பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த அந்த பணியிடத்தில் நியமிக்கப்பட்டேன். என் நியமனத்தை அங்கீகரிக்க, பள்ளி நிர்வாகம், மாவட்டக் கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தது.
பல காரணங்களை கூறி, என்னை பணி நிரந்தரம் செய்ய, மாவட்டக் கல்வி அதிகாரி மறுத்துவிட்டார். என் நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அங்கீகரிக்கவில்லை
அதை விசாரித்த நீதிமன்றம், 2023ல் என் நியமனத்தை அங்கீகரிக்கவும், பணி நியமன தேதியிலிருந்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை என் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை.
எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத, பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2019ம் ஆண்டில் இருந்து ஒப்புதல் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, 2024 ஆக., 1 முதல் ஒப்புதல் அளித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்; இது ஏற்புடையதல்ல.
அறிக்கை தாக்கல்
அவர், நீதிமன்றத்தில் ஆஜராக, நோட்டீஸ் பிறப்பித்தும் ஆஜராகவில்லை; நீதிமன்ற உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுக்கு, ஒரு வாரம் சாதாரண சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, பிப்.26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக, உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாத, அதிகாரிகளின் செயல்களுக்கு, நீதிமன்றம் அவ்வப்போது அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

