UPDATED : ஜன 13, 2024 04:19 PM
ADDED : ஜன 03, 2024 11:21 PM

வரும் லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க., தயாராகி வருகிறது. மீதியுள்ள 10 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே பதவிகளை அனுபவித்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல், ஜெயலலிதா பாணியில் புதுமுகங்களை களம் இறக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டம் தயாரித்துள்ளதாக அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
மறுபரிசீலனை
பா.ஜ., தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன் அ.தி.மு.க., வெளியேறியது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பேச்சும், செயலும் பிடிக்காமல் பழனிசாமி இந்த முடிவை எடுத்தார் என கூறப்பட்டது.
எனினும், பிரதமர் உட்பட அக்கட்சியின் தேசிய தலைவர்களுடன் நல்ல உறவு இருந்ததால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க தன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக, ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிகளை பார்த்த பின் பழனிசாமி மனம் மாறும் என பேச்சு நிலவியது. ஆனால், மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டு சேர வாய்ப்பே இல்லை என அ.தி.மு.க., பொதுக்குழுவில் அவர் உறுதியாக அறிவித்தார். இனிமேலும் அந்த கட்சியுடன் எந்த உறவும் கிடையாது என கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் உறுதி அளித்து வருகிறார். திருச்சி விழாவுக்கு வரும் பிரதமரை பழனிசாமி சந்திப்பார் என்ற கடைசி எதிர்பார்ப்பும் பொய்யானது.
அணுகுமுறை
இதையடுத்து, சிறுபான்மையினர் நடத்தும் கட்சிகளும், சில சிறு கட்சிகளும் அ.தி.மு.க., கூட்டணியில் சேர ஆர்வம் காட்டுகின்றன. பா.ஜ., உறவு கிடையாது என்ற பழனிசாமியின் அறிவிப்பு, தி.மு.க., கூட்டணியிலும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
ஆட்சிக்கு வந்த பின், தி.மு.க., தலைமையின் அணுகுமுறை அடியோடு மாறிவிட்டதாக அதிருப்தியில் இருந்த கூட்டணி கட்சிகளின் பார்வை, அ.தி.மு.க., பக்கம் திரும்புகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த பட்டியலில் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியை இழுக்கும் வேலையில் தி.மு.க., இறங்கி விட்டதாக எழுந்திருக்கும் சந்தேகம், வி.சி.,க்கள் சிந்தனைக்கு உரமாகி இருக்கிறது.
இதனால் பழனிசாமி உற்சாகம் அடைந்திருக்கிறார். புதுச்சேரி உள்ளிட்ட 30 இடங்களில் தன் கட்சியை களம் இறக்கி, மீதமிருக்கும் 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்தளிக்க திட்டம் தயார் செய்திருக்கிறார்.
காங்கிரஸ், வி.சி., போன்ற கட்சிகள் வரும்பட்சத்தில், இந்த எண்ணிக்கையை திருத்திக் கொள்ள அவர் தயாராக இருக்கிறார். கூட்டணி கட்சிகளோடு இணக்கமான போக்கை கையாளவும், தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா பாணியில் கறார் காட்டவும் முடிவு செய்திருக்கிறார் என பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்கள், மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு இருப்பவர்கள், சிறந்த களப்பணியாளர்கள் என்ற ரீதியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி விரும்புகிறார்.
லிஸ்டில் உள்ள 30 லோக்சபா தொகுதிகள்:
சேலம், கிருஷ்ணகிரி, வேலுார், ஆரணி, அரக்கோணம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், கடலுார், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தேனி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி, பொள்ளாச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலுார், புதுச்சேரி
வரும் 9ல் அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்
அ.தி.மு.க., தலைமை அறிக்கை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்., மாளிகையில், வரும் 9ம் தேதி காலை 10:30 மணிக்கு, மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
'உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்!'
''அ.தி.மு.க.,வில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உறுதியளித்தார்.கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ஐ.டி., அணி நிர்வாகிகளின் பிரசாரப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. சென்னை, காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட, 12 மண்டலங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.'புரட்சித் தமிழரின் மாஸ்டர் கிளாஸ்' என்ற தலைப்பில் நடந்த அக்கூட்டத்தில், 'அ.தி.மு.க., - ஐ.டி., அணி தொடர்பு' என்ற மொபைல்போன் செயலியை, பழனிசாமி துவக்கி வைத்து பேசியதாவது:சமூக வலைதளங்களில் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்கக் கூடாது. பிற கட்சிகளின் ஐ.டி., அணி போல வெறுப்பை உண்டாக்கக் கூடாது. அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளையும், தி.மு.க., அரசு செய்ய தவறியதையும், தவறுகளையும் மக்களிடம் ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்து சொல்ல வேண்டும். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஐ.டி., அணி யாருடைய தலையீடும் இல்லாமல், என் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். எதற்காகவும், யாருக்காகவும் அஞ்ச வேண்டாம்.எந்த விவகாரம் என்றாலும், என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். உங்களுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். அதனால் தான், புத்தாண்டின் முதல் கூட்டமாக, ஐ.டி., அணி கூட்டத்தில் பங்கேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.