ADDED : பிப் 29, 2024 12:01 AM

திருநெல்வேலி : ''தமிழகத்தில் இனி தி.மு.க., இருக்காது. குடும்ப அரசியல் நடத்தி பணம் சம்பாதிப்பதற்காக, தமிழக மக்களை சிறுமைப்படுத்தும் தி.மு.க.,வை இனி தேடினாலும் கிடைக்காது,'' என, பிரதமர் மோடி கூறினார்.
திருநெல்வேலியில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
திருநெல்வேலியில் அருளாசி தரும் நெல்லையப்பர், காந்திமதிஅம்மனை வணங்குகிறேன். இந்த நாட்டிற்காக உழைக்க எனக்கு நல்லாசி வழங்க வேண்டுகிறேன். திருநெல்வேலி அல்வா போல, திருநெல்வேலி மக்களும் இனிமையானவர்கள்.
தமிழக மக்கள், எதிர்காலம் குறித்து தெளிவாக உள்ளனர். பா.ஜ.,வின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களோடு ஒத்துப் போகிறது; ஒன்றுபடுகிறது. இதனால், தமிழக மக்களுக்கு பா.ஜ., மீது புது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வளம்
இந்தியா இன்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிநாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு முன்னேறுகிறது. அதற்கான வளங்கள் தமிழகத்தில் உள்ளன.
வெளிநாடுகளில் இந்தியர்களை மரியாதையோடு பார்க்கின்றனர். இது, மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி. இதை உணர்ந்த தமிழக மக்கள், தற்போது பா.ஜ.,வை பின்தொடர்கின்றனர். தற்போது டில்லிக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள துாரம் குறைந்துள்ளது.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என, பல தரப்பினருக்குமான திட்டங்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்திருக்கின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், 21 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் கிடைத்தது. தற்போது தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கும் மேலாக வீட்டு குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளோம்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 40 லட்சம் குடும்பங்களுக்கு சிலிண்டர்கள் சென்று சேர்ந்துள்ளன. நாடு, 100 மடங்கு முன்னேறினால், தமிழகமும் 100 மடங்கு முன்னேறும். இது, மோடியின் உறுதிமொழி.
மதுரை எய்ம்ஸ்
நாட்டில் பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கி வருகிறோம். அதில் மதுரையும் ஒன்று. மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. மத்திய அரசு என்ன செய்தாலும் அதை குறை சொல்கின்றனர். அதையும் மீறி நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
மத்திய அரசு தரும் திட்டங்களை தடுக்க வேண்டும்; கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் இந்த மாநில அரசுக்கு உள்ளது என பார்க்க வேண்டும். இவர்கள், வளர்ச்சியை தடுப்பது, நாட்டை கொள்ளை அடிப்பதற்காக. ஆனால், மோடி விடமாட்டேன்; இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்துவேன்.
தமிழகத்திற்கும், ராமருக்கும் என்ன தொடர்பு என கேட்கின்றனர். அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு முன், நான் தனுஷ்கோடி உள்ளிட்ட கோவில்களில் ஆசி பெற்ற பின்னரே அயோத்தி ராமர் கோவிலை திறந்தோம். ராமர் கோவில் திறப்பால் மொத்த தேசமும் மகிழ்ச்சி அடைந்தது.
அக்கறை இல்லை
பார்லிமென்டில் ஒரு தீர்மானம் வந்தபோது, தி,மு.க., - எம்.பி.,க்கள் அதற்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். இதன் வாயிலாக தமிழக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை தி.மு.க., எதிர்ப்பது தெளிவாகிறது.
தி.மு.க.,வின் ஒரு குடும்பம் தன் வளர்ச்சியில் அக்கறை காட்டுகிறதே தவிர, தமிழகத்தின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. அவர்கள் வெறுப்பு அரசியலை வளர்க்கின்றனர்.
பா.ஜ., அரசு அப்படியல்ல. ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழரைமத்திய அமைச்சராக்கி இருக்கிறோம். அவர் ஹிந்தி பேசும் மாநிலத்திலிருந்து எம்.பி., ஆகியுள்ளார். ஆனால், தமிழகத்தில் ஹிந்தி - தமிழ் என வெறுப்புணர்வை உருவாக்குகின்றனர்.
எங்களுக்கு நாடும், மக்களும் தான் முக்கியம். இந்திய வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். அவரை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்தோம். இலங்கையில், இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது; அவர்களை மீட்டு வந்தோம்.
இந்த மோடியை மீறி எவரும், இந்தியர்கள் மீது கை வைக்க முடியாது. இதுவும் மோடியின் உத்தரவாதம்.
தி.மு.க., போன்ற சக்திகளை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. தி.மு.க., பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது. தி.மு.க., இனி தமிழகத்தில் இருக்காது. தாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக, தமிழக மக்களை சிறுமைப்படுத்தும் தி.மு.க., முற்றிலுமாக அகற்றப்படும்; தேடினாலும் கிடைக்காத நிலை ஏற்படும்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளோம். இது குறித்து தி.மு.க., வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், சீனாவின் கொடியும், சீனாவின் ராக்கெட்டும் இடம் பெற்றுள்ளன. தி.மு.க.,வினரின் தேசப்பற்று எப்படிப்பட்டது என்பது இதிலிருந்தே புரிகிறது.
தமிழில் மருத்துவ கல்வி
பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த அனுபவம் மோடியிடம் உள்ளது. இனி வரும் ஐந்தாண்டுகளில், என்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதியான திட்டமும் உள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம்.
இந்தியாவில் மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சியில் அமரும் போது, சர்வதேச அளவில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த நாடாக திகழும்.
இனி வரும் ஆண்டுகளில், இந்தியாவின் தொழில் வளம் வேகமாக விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத்தை தமிழிலேயே கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு எனும், 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' வாயிலாக தமிழ் மொழியின் தன்மையும், வலிமையும் அதிகரிக்க உள்ளது. வரும் ஆட்சிக் காலத்தில் இந்தியா மிகப்பெரிய உள்கட்டமைப்பை ஏற்படுத்தும்.
சர்வதேச நாடுகளில் இருக்கும் அத்தனை வசதிகளையும், இந்தியாவின் ஒவ்வொரு இல்லங்களும் பெறும்.
வரும் பொதுத்தேர்தலில், பா.ஜ., வளர்ச்சியையும், தொலைநோக்கு பார்வையையும் முன்வைக்கிறது.
தி.மு.க.,வும், காங்கிரசும் இதற்கு எதிர்புறம் நிற்கின்றன. அவர்கள் ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக வளம் பெற வேண்டும் என நினைக்கின்றனர். குடும்ப ஆட்சி மீண்டும் வர நினைக்கின்றனர். தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கேட்டுப் பாருங்கள்; அவர்களிடம் பதில் இல்லை.
அடுத்து யார் முதல்வர், அமைச்சராக வருவது என்பதில் கவனமாக உள்ளனர்.
அண்ணாமலையின் யாத்திரை
மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் உள்ளனர். மொழி, இனம், ஜாதி என, எதையாவது ஒன்றை கூறி மக்களை பிரித்து வைக்கின்றனர். மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை.
அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' யாத்திரை வாயிலாக மக்களை ஒன்றுபடுத்துகிறார். ஏழை மக்களுக்கு உழைப்பவர்களுக்கு பா.ஜ., என்றும் துணை நிற்கிறது.
தன் குடும்பம், ஆட்சி என வருகிறவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் பிள்ளைகள் குறித்து கவலை இல்லை. தங்களின் பிள்ளைகள் குறித்து தான் கவலைப்படுகின்றனர்.
உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, மோடியாகிய நான் இருக்கிறேன்; உங்கள் முன் நிற்கிறேன்.
வரும் தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கப் போகிறது என எதிர்க்கட்சிகளும் பேசத் துவங்கிவிட்டன. மக்களும் பா.ஜ., மீது நம்பிக்கை வைக்கின்றனர். வெறும் இந்த நம்பிக்கை மட்டும், வெற்றி தரும் என நாம் வீட்டுக்குள் இருக்க முடியாது.
நீங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, மக்களிடம் ஆதரவு கேளுங்கள். இதன் வாயிலாகவே தேர்தலில் நாம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தமிழும் நானும் நீங்களும்!
தமிழ் மொழி மீது நான் கொண்டிருக்கும் அபிமானம் உங்களுக்கு தெரியும். செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமையை பரப்புகிறேன். ஆனால், தமிழில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் என் மனதில் நிறைந்திருக்கிறது. ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தமிழில் பேச முடிகிறது. முழுவதுமே தமிழில் பேச முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
நான் பேசும் மொழியின் வார்த்தைகள் உங்களுக்கு புரியாவிட்டாலும், என் மனசை, என் உள்ளத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. கரகோஷம் வாயிலாக, ஆரவாரம் வாயிலாக அதை வெளிப்படுத்துகிறீர்கள். இந்த அன்புக்காக இரு கரம் கூப்பி உங்களை வணங்குகிறேன்; எனக்கு ஆசி வழங்குங்கள்.
---------------

