வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் பேனர்கள்; கோவை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு
வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் பேனர்கள்; கோவை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு
ADDED : நவ 24, 2024 11:17 AM

கோவை: கோவை மாநகரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் சட்டவிரோத பேனர்களையும், விளம்பர பலகைகளையும் மூடி மறைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள ப்ரூக் பாண்ட் சாலை எனப்படும் கிருஷ்ணசாமி சாலை, கோவையின் பிரதான சாலைகளில் ஒன்றாகும். ரயில்நிலையம், கலெக்டர் ஆபிஸ், டவுன்ஹால் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலை என்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.
இந்த சாலையின் இருபுறங்களிலும் சட்டவிரோதமாக பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கவனத்தை சிதறடிக்கும் வகையில் இருப்பதாக வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் அடுத்தடுத்து புகார்கள் அளித்து வந்தனர்.
ப்ரூக் பாண்ட் சாலை முதல் கூட்ஸ் ஷெட் சாலை வரையில், ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் சுமார் 400 மீட்டருக்குள் 15 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற முயன்ற போது, அதற்கு சென்னை ஐகோர்ட்டில் தடை பெறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களைக் கூட அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேனர்களையும், விளம்பர பலகைகளையும் அகற்றுமாறு தொடர்ந்து கோரிக்கைகளை எழுந்து வந்தது.
இந்நிலையில், பேனர்களையும், விளம்பர பலகைகளையும் அகற்றுவதற்கு பதிலாக, மாற்று வழியை கோவை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. அதாவது, மிகப்பெரிய துணி ஸ்கிரீன்களை வைத்து, சட்டவிரோத பேனர்களையும், விளம்பர பலகைகளையும் மறைக்க இருப்பதாகவும், இது தொடர்பாக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

