ADDED : ஜூலை 11, 2026 06:22 AM

சென்னை: 'மதுக்கூட ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை, ஏற்கனவே உள்ள விதிகளின் அடிப்படையில், மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்க அறிவுறுத்தப்படுகிறது' என, 'டாஸ்மாக்' நிறுவன மேலாண் இயக்குநர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளை ஒட்டி, தின்பண்டம், குளிர்பானம் விற்க, தனியாருக்கு மதுக்கூட ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஜூன், 30ம் தேதியுடன் முடிவடைந்தது.
புதிதாக மதுக்கூட ஒப்பந்தம் விட, 'டெண்டர்' கோரப்படாததால், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை, இரு மாதங்களுக்கு நீட்டிக்க, டாஸ்மாக் முடிவு செய்தது. இதற்கு அதன் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், 'மதுக்கூட ஒப்பந்ததாரர்களுடனான ஒப்பந்தங்களை, அதே நிபந்தனைகளின் அடிப்படையில், மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கவும்' என, அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
