வக்கீலை வி.சி.க.,வினர் தாக்கிய சம்பவம் விசாரிக்க குழு அமைத்தது 'பார் கவுன்சில்'
வக்கீலை வி.சி.க.,வினர் தாக்கிய சம்பவம் விசாரிக்க குழு அமைத்தது 'பார் கவுன்சில்'
ADDED : அக் 17, 2025 01:40 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே, வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்பு குழு அமைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாக்குதல் சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார் மோதியது.
இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி.க.,வை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தாக்கி காயப்படுத்தினர். அவரது வாகனத்தையும் சாலையில் தள்ளி சேதப் படுத்தினர்.
தற்காப்புக்காக, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்தவரை, உள்ளே நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், சரமாரியாக தாக்கியதுடன், பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தினர்.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தமிழக பார் கவுன்சிலுக்கு எதிராக, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், டி.சரவணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தவிர்க்க வேண்டும் அதில், 'கடந்த 7ம் தேதி, பார் கவுன்சில் வளாகத்திலும், அதை சுற்றிய பகுதிகளிலும் நடந்த, விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்பட்டதாக கருத்தில் வைத்து, இந்த சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
'இக்குழு விசாரித்து, உண்மையை கண்டறியும். சம்பவம் குறித்து விசாரித்து, இரண்டு வாரங்களுக்குள் பார் கவுன்சிலின் பொதுக்குழுவுக்கு அறிக்கை அளிக்கும்.
'வி சாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதால், நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கவோ அல்லது நீதி நிர்வாகத்திற்கு ஏதேனும் இடையூறு, குறுக்கீடு ஏற்படுத்துவதையோ, வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும்' என, கூறப் பட்டுள்ளது.