ADDED : மே 29, 2025 06:23 AM

சென்னை:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
கடந்த 2024 - -25ல் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 100 கிலோ எடையுள்ள குவின்டாலுக்கு 2,369 ரூபாயாகவும், சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை, 2,389 ரூபாயாகவும், மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கடந்த ஆண்டைவிட, குவின்டாலுக்கு வெறும் 69 ரூபாய், அதாவது 3 சதவீதம் மட்டும் உயர்த்துவது போதுமானது அல்ல.
நெல்லுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கும்போது, விவசாயிகளின் நலனை, மத்திய அரசு கருத்தில் கொள்வதில்லை. கொள்முதலுக்கான ஊக்கத்தொகை வழங்குவதில், தமிழக அரசும் துரோகம் செய்கிறது. கடந்த ஆண்டில், ஒரு குவின்டால் நெல்லுக்கு, சாதாரண வகைக்கு 105 ரூபாய், சன்ன ரகத்துக்கு 120 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
ஒடிஷாவில் குவின்டாலுக்கு 800 ரூபாய், தெலுங்கானாவில் குவின்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழக அரசும் குவின்டாலுக்கு 1,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
மத்திய அரசிடம் பேசி, ஒரு குவின்டாலுக்கு 3,500 ரூபாய் வீதம், கொள்முதல் விலை வழங்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.