பி.ஜி.ஆரின் ரூ . 128 கோடி கைப்பற்றியது மின் வாரியம்
பி.ஜி.ஆரின் ரூ . 128 கோடி கைப்பற்றியது மின் வாரியம்
ADDED : மார் 10, 2024 01:50 AM
சென்னை:திருவள்ளூர், எண்ணுார் விரிவாக்க அனல் மின் நிலைய கட்டுமான பணியை துவக்காமல், ஒப்பந்த நிறுவனமான பி.ஜி.ஆர்., அலட்சியம் காட்டுகிறது. இதனால், அந்நிறுவனத்தின் வங்கி உத்தரவாத தொகையான, 128 கோடி ரூபாயை மின் வாரியம் கையகப்படுத்திஉள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணுார் அருகே மின் வாரியம், 660 மெகா வாட் திறனில் எண்ணுார் விரிவாக்க அனல் மின் நிலையம் அமைக்கிறது. இதன் கட்டுமான பணி, 2014ல் துவங்கியது. இதை, 'லேன்கோ' என்ற ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டது. திட்டச்செலவு, 3,921 கோடி ரூபாய்.
நான்கு ஆண்டுகளில் மின் உற்பத்தியை துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், லேன்கோ பணிகளை மிகவும் மந்தகதியில் மேற்கொண்டதுடன், 2018ல் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதனால், 17 சதவீத பணிகளுடன் எண்ணுார் விரிவாக்க மின் திட்டம் முடங்கியது.
இதையடுத்து, வேறொரு ஒப்பந்த நிறுவனம் வாயிலாக பணிகளை மேற்கொள்ள, 2018ல் டெண்டர் கோரப்பட்டது. இரு நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், பி.ஜி.ஆர்., தேர்வாகியது. திட்டச்செலவு, 4,442 கோடி ரூபாய். அந்நிறுவனம், வங்கி உத்தரவாத தொகையை செலுத்தவில்லை.
இதனால், 2021 ஏப்ரலில் அதன் ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டது. பின், உத்தரவாத தொகை வழங்கியதால், 2022ல் மார்ச்சில் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.
ஒப்பந்தப்படி, மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடித்து மின் உற்பத்தி துவக்கப்பட வேண்டும். இதுவரை, எந்த பணியும் துவங்கப்படவில்லை. எனவே, 'ஏன் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது' என, பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு மின் வாரியம் கடந்த ஆண்டு, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இந்நிலையில், அந்நிறு வனத்தின் வங்கி உத்தரவாத தொகை, 128 கோடி ரூபாயை மின் வாரியம் அதிரடியாக கையகப்படுத்தியுள்ளது.

