ADDED : பிப் 23, 2024 10:07 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
உற்சவத்தையொட்டி, தினமும், காலை, மாலையில், காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.
இதில், ஒன்பதாம் நாளான இன்று காலை ஆள்மேல் பல்லக்கு உற்சவம் நடந்தது. இரவு, பிரபல உற்சவமான வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில், இரவு 9:15 மணிக்கு காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், பல்வேறு பூஜைகளுக்குபின், 9:32 மணிக்கு வானவேடிக்கை முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது.
நான்கு ராஜ வீதிகளிலும் அசைந்து ஆடியபடி தேர் பவனி வந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கரமடம் மேலாளரும், காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமுமான சுந்தரேச ஐயர், உதவி ஆணையர், செயலர் அலுவலர் சீனிவாசன், காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.