ADDED : நவ 21, 2025 11:30 PM
சென்னை: பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ராமநாதபுரம் எம்.பி.,யின் அலுவலக டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சென்னை கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ், 50. ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., நவாஸ் கனியின், அடையாறு முகாம் அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, எம்.பி.,யின் கார் ஓட்டுநரான முகமது இஸ்மாயில், 49, என்பவருடன், பணி முடித்து, வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். இஸ்மாயில் பைக்கை ஓட்டிச்செல்ல, பின்புறம் சுரேஷ் அமர்ந்திருந்தார்.
கொட்டிவாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே தவறான திசையில் வேகமாக வந்த பைக், இஸ்மாயில் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது.
இதில், சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இஸ்மாயில், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், விபத்தை ஏற்படுத்தியது, திருவான்மியூரை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாணவரின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

