பா.ஜ., தூது; சிக்காத வேலுமணி.. 'எஸ்கேப்' ஆனது எப்படி?
பா.ஜ., தூது; சிக்காத வேலுமணி.. 'எஸ்கேப்' ஆனது எப்படி?
ADDED : மார் 11, 2024 07:13 AM

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த முகையூரில், தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில், உயரமான ஆவுடையாருடன் லிங்கம் வெளிப்பட்டது. பழங்கால லிங்கம் என்பதை அறிந்து, பக்தர்கள் வழிபட்டனர்.
இதையடுத்து, சொர்ணாம்பிகை உடனுறை கனகபுரீஸ்வரர் கோவில் எழுப்பப்பட்டு, 2017ல் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இக்கோவில் கட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நிதி கொடுத்ததாக அப்போதே பேசுபொருளானது. அவரும், அவரது குடும்பத்தாரும் அடிக்கடி அக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோவிலில் கடந்த 8ம் தேதி, மஹா சிவராத்திரி நள்ளிரவு பூஜையில், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரான வேலுமணி பங்கேற்றார். அப்பகுதி அ.தி.மு.க., பிரமுகர்கள் யாருக்கும் தெரியாமல், தன் ஆதரவாளரான திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலர் ஒருவருடன் வந்து வழிபட்டு சென்றுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் கூட்டணியில், அ.தி.மு.க.,வை தம் பக்கம் இழுக்க பா.ஜ., முயற்சித்து வருகிறது. இது சம்பந்தமாக, கோவையில் உள்ள பிரபல 'மாடர்ன்' சாமியார் வாயிலாக, வேலுமணியுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மஹா சிவராத்திரிக்குள் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து முடிவு செய்ய, பா.ஜ., விரும்பியதாக தெரிகிறது. அந்த சந்திப்பை தவிர்க்கவே, வேலுமணி முகையூர் சென்றுள்ளார். வேறு எங்கு வேண்டுமானாலும் அவர் சென்றிருக்கலாம். ஆனால், சசிகலா அடிக்கடி சென்று வரும் கோவிலுக்கு அவர் வந்து சென்றது தான் சந்தேகத்தை கிளப்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

