அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : பிப் 04, 2025 06:57 AM

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பக்தர்கள் மீது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது,'' என, மதுரையில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: ஹிந்து அமைப்புகள் எதைச் செய்தாலும் அதை தடுப்பது என தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் செய்கிறது.
திருப்பரங்குன்றத்தில் பிப்.,4 ஹிந்துமுன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., என பல அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதற்கு வழக்கம்போல போலீஸ் அனுமதி மறுப்பு, கெடுபிடி உள்ளது. ஆர்ப்பாட்டம் குறித்து பல மாவட்டங்களிலும் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்கின்றனர். இதனால் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை முருக பக்தர்கள் மீது தொடுத்துள்ளதாக கருதுகிறோம்.
ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம். அதே போல அரசு, கலெக்டர், எஸ்.பி.,யும் கட்டுப்பட வேண்டும். இங்கு போராட்டத்திற்குத்தான் தடை விதித்துள்ளனர். தைப்பூச நேரத்தில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் கெடுபிடி காட்டுவது சரியா.
பா.ஜ., எதிர்க்கட்சியாக உள்ள கேரளா, மேற்கு வங்கத்தில்கூட அனுமதிக்கின்றனர். இங்கு எந்த ஜனநாயக வழிமுறையையும் அனுமதிப்பதில்லை. தி.மு.க.,வுக்கு ஒரு நீதி. மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா என்றார்.

