தமிழகத்தை இருண்ட சூழலில் கொண்டு வந்து நிறுத்திய முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
தமிழகத்தை இருண்ட சூழலில் கொண்டு வந்து நிறுத்திய முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
ADDED : அக் 05, 2025 05:20 PM

சென்னை; தமிழகத்தை இருண்ட சூழலில் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி உள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ்வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு.
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்னைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதல்வர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே.
இவ்வாறு தமது பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.