ADDED : பிப் 12, 2025 03:59 AM

சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, தி.மு.க., சார்பில் மாநிலம் முழுதும் கடந்த சனிக்கிழமை கண்டன பொதுக்கூட்டங்கள் நடந்தன. சென்னை அடுத்த ஆவடியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு மீது குற்றம்சாட்டி பேசினார்.
இதேபோல், மற்ற மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட தி.மு.க.,வினர், மத்திய அரசையும், மத்திய பட்ஜெட்டையும் கண்டித்து பேசினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பா.ஜ., சார்பில், இன்று முதல் வரும், 15ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
சென்னை திருவான்மியூரில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை பேசுகின்றனர். மற்ற மாவட்டங்களிலும், தி.மு.க.,வுக்கு பதிலடி தரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக, தமிழக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.