மிரட்டல்களால் பா.ஜ., போராட்டத்தை தடுக்க முடியாது: அண்ணாமலை
மிரட்டல்களால் பா.ஜ., போராட்டத்தை தடுக்க முடியாது: அண்ணாமலை
ADDED : ஜன 03, 2025 05:50 PM

சென்னை: '' எங்களின் போராட்டத்தை எந்த மிரட்டல்களினாலும், தடுக்க முடியாது என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவேன் எனக்கூறினார். ஆனால், நமது தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை பாதுகாக்கத் தவறிய தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டங்களை நசுக்குவது என்ற தி.மு.க., அரசின் செயல்பாடுகள், முதல்வரின் இரும்புக்கரம் பயனற்றது என்பதையும், துருப்பிடித்தது என்பதையும் காட்டுகிறது.கொடுங்கோல் மற்றும் திறமையற்ற தி.மு.க.,ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ., மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் அடைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டத்தை எந்த மிரட்டல்களினாலும், தடுக்க முடியாது என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

