'ஜனநாயகன்' விவகாரம் தொடர்பான ஆதவ் கருத்துக்கு பா.ஜ., கண்டனம்
'ஜனநாயகன்' விவகாரம் தொடர்பான ஆதவ் கருத்துக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : ஏப் 11, 2026 10:40 PM
சென்னை:த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானதற்கு, மத்திய அமைச்சர் முருகனை காரணமாக கூறிய அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க., தலைவரான நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது. இதற்கு, 'மத்திய அமைச்சர் முருகனும், துணை முதல்வர் உதயநிதியும் காரணம்' என, த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். இதற்கு, தமிழக பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
* தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: ஆதவ் அர்ஜுனா தேவையில்லாமல் பா.ஜ., மற்றும் அமைச்சர் முருகன் பெயரை எல்லாம் இழுக்கிறார். அதையும், அரசியலையும் குழப்பக் கூடாது. ஜனநாயகன் வீடியோவை யார் அனுப்பினாலும் பார்க்காதீங்க. தேவையில்லாமல் அமைச்சர் முருகன் பெயரை உள்ளே இழுக்கக்கூடாது. இது, அரசியல் அநாகரிகம். யார் தவறு செய்தனரோ, போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக, தேவையின்றி பா.ஜ.,வை இழுக்காதீங்க. பா.ஜ., இந்தியாவில் எத்தனை இடங்களில் அரசியல் செய்கிறது. 'சென்சார் போர்டு'க்கும் எங்களுக்கும் என்ன 'கன்ட்ரோல்' இருக்கிறது. ஆதவ், த.வெ.க., தலைவர்களின் கருத்துகளை கண்டிக்கிறேன்.
* தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத்:
படத்தை தாங்களாக வெளியிட்டு தவறு செய்துவிட்டு, அதை மறைக்க கொடுத்த மோசடி புகார் குறித்த உண்மை, விரைவில் வெளிச்சத்துக்கு வரும். பா.ஜ., மீதும், மத்திய அமைச்சர் முருகன் மீதும் பொய் குற்றஞ்சாட்டி, அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். இது குறித்து விசாரிக்க, சி.பி.ஐ., விசாரணையை நடிகர் விஜய் கேட்கத் தயாரா?
தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற வாக்காளர்களின் எதிர்ப்பு ஓட்டுகள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கக்கூடாது என்ற சதி திட்டத்துடன் ஆதவ் செயல்படுகிறார். முருகன் மீது கூறிய பொய் குற்றச்சாட்டின் வாயிலாக, ஆதவின் தீய எண்ணம் வெளிப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
***
