ADDED : ஆக 14, 2026 06:46 AM

கோவை: மத போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சுக்கு பா.ஜ., சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் ஜான்சன் ஜோசப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எப்.சி.ஆர்.ஏ., என்கிற சட்ட திருத்தத்தை மத்திய அரசு எதற்காக கொண்டு வருகிறது என அறியாமல், மனதில் தோன்றியதை பேசி, கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதுபோல், மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசுகிறார். வெளிநாடுகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் நிதி திரட்டி, நம் நாட்டுக்கு அனுப்பி, பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதிக்கும் வகையில் செய்யும் சமூக அமைப்புகளே இச்சட்டத்தை பார்த்து பயப்பட வேண்டும். சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனமோ, மருத்துவமனைகளோ, பிற சமூக சேவைகளோ செய்வதற்காக பெறப்படும் பணத்தை என்ன நோக்கத்துக்காக வாங்கினார்களோ, அந்த நோக்கம் நிறைவேறினால் மத்திய அரசு தடை செய்யவில்லை.
எவ்வளவு பணம் எந்த நாட்டில் இருந்து எதற்கு வந்தது, அந்த பணத்தை எதற்கு செலவு செய்திருக்கிறார்கள் என கணக்கு காட்டாமல் இருக்கும் சமூக விரோதிகளே அச்சப்பட வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளார்.
