உள்ளாட்சிகளில் வரி மோசடி புகார் சி.பி.ஐ., விசாரணை கேட்கும் பா.ஜ.,
உள்ளாட்சிகளில் வரி மோசடி புகார் சி.பி.ஐ., விசாரணை கேட்கும் பா.ஜ.,
ADDED : அக் 19, 2025 02:00 AM
சென்னை: 'உள்ளாட்சி அமைப்புகளில், மாநிலம் முழுதும் நிலவும் நிர்வாக சீர்கேடு, வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில், 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, மேயர் இந்திராணி, பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த முறைகேட்டில், தி.மு.க., அமைச்சர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கக்கூடிய வகையில், மதுரை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்த விவகாரத்தில், மேயரின் கணவர் பொன் வசந்த் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களை பலியிட்டு விட்டு, பெரிய தலைகளை காப்பாற்ற, தி.மு.க., அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஊழல், நிர்வாக குளறுபடி, நம்பிக்கையில்லா தீர்மானம் உட்பட பல்வேறு காரணங்களால், கோவை, திருநெல்வேலி தி.மு.க., மேயர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அந்த வரிசையில், மதுரையும் இணைந்திருக்கிறது. இது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில், தி.மு.க., அரசு எந்தளவிற்கு தோல்வி அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளை, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் தி.மு.க., அரசின் நாடு போற்றும் நல்லாட்சி.
மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க, மேயர்கள் ராஜினாமா, புது மேயர் விரைவில் பதவியேற்பு என, தி.மு.க., அரசு என்ன தான் நாடகம் ஆடினாலும், மாநிலம் முழுதும் நிலவும் நிர்வாக சீர்கேடுகள், வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.