பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் வரும் 23ல் தமிழகம் வருகை
பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் வரும் 23ல் தமிழகம் வருகை
ADDED : டிச 19, 2025 07:01 AM

வரும் 23ல் சென்னை வரும் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அ.தி.மு.க., தலைமை வகிக்கிறது. அக்கட்சி தலைமையுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தி, 50 தொகுதிகளை பெற பா.ஜ., முடிவு செய்துள்ளது.
எனவே, தொகுதி பங்கீடு குறித்து பேசுவதுடன், பா.ஜ., வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களை கவனிக்கவும், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக, அக்கட்சி மேலிடம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
அவரும், இணை பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹல் ஆகியோரும், வரும் 23ல் சென்னை வர உள்ளனர்; அன்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளனர்.
இதை தொடர்ந்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோரையும் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்; மேலும், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களையும், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் சந்திக்க உள்ளார்.

