பா.ஜ., நிர்வாகி குற்றச்சாட்டு; ஹோட்டல் சங்கத்தினர் மறுப்பு
பா.ஜ., நிர்வாகி குற்றச்சாட்டு; ஹோட்டல் சங்கத்தினர் மறுப்பு
ADDED : மார் 11, 2026 04:34 AM

சென்னை: 'வருமான வரி செலுத்துவதில், முறைகேடு செய்ததை கண்டுபிடித்து, 'நோட்டீஸ்' அனுப்பியதால்தான், ஹோட்டல் உரிமையாளர்கள் சமையல் காஸ் சிலிண்டர் இல்லை என்கின்றனர்' என, தமிழக பா.ஜ., நிர்வாகி அஸ்வத்தாமன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, ஹோட்டல் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., மாநிலச் செயலர் அஸ்வத்தாமன் கூறியதாவது: கடந்த, 9ல் வருமான வரித்துறையில் இருந்து, நாடு முழுதும், 62,000 ஹோட்டல்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். அவர்கள், போலி ரசீது வாயிலாக, வருமானத்தை மறைத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பு செய்துள்ளனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை வரித்துறை கண்டுபிடித்து, 62 ஹோட்டல்களில் ஆய்வு செய்ததில் 408 கோடி ரூபாய் வருமானம் மறைத்தது தெரிந்தது. அந்த விபரம் மதியம், நோட்டீஸாக அனுப்பப்பட்டதும், அன்றிரவு முதல் காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டது என, ஒப்பாரி வைக்கின்றனர். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இது குறித்து, சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் முறையில், யாரும் முறைகேடு செய்ய முடியாது. வணிக சமையல் காஸ் சிலிண்டர், நான்கு நாட்களாக கிடைக்கவில்லை. இதை, எண்ணெய் நிறுவனங்களே தெரிவித்து விட்டன. யாராவது செய்த தவறுக்கு, தமிழகத்தில் உள்ளவர்களை குறை கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
