இலவச காப்பீடு திட்டம் முதியோரை சேர்க்கிறது பா.ஜ.,
இலவச காப்பீடு திட்டம் முதியோரை சேர்க்கிறது பா.ஜ.,
ADDED : நவ 23, 2025 02:58 AM

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், தமிழக பா.ஜ.,வினர், முதியோரை வீடு தேடிச் சென்று, அவர்களை மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின், 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு, காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம்.
தமிழக அரசு, 65 வயதுக்கு உட்பட மூத்த குடிமக்களுக்கு, ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்கும் திட்டத்தை, கடந்த ஆகஸ்டில் துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குவதால், முதியோருக்கு சிரமம் குறைந்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இதனால் வாக்காளர்களை கவரும் நடவடிக்கையில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழக பா.ஜ., சார்பில், மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் சேர்க்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
எனவே, முதியோரின் வீடுகளுக்கே சென்று, அவர்களை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் பணியில், பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, சென்னை வேளச்சேரியில், தனியே இரு வாகனங்களில், 'லேப்டாப்' உள்ளிட்ட சாதனங்களுடன், பா.ஜ.,வினர் வீடு வீடாக சென்று, காப்பீடு, ஆதார் சேவைகளைப் பெற உதவுகின்றனர்.
இது குறித்து, தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் கூறுகையில், ''அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர் சிரமமின்றி, பிரதமரின் காப்பீட்டு திட்டத்தை பெற, வீடுகளுக்கே சென்று, காப்பீடு எடுத்து தரப்படுகிறது.
அடுத்த நாள், காப்பீடு அட்டை தயாரானதும் எடுத்துச் சென்று வழங்கப்படுகிறது. ஆதார் சேவை, காப்பீடு சேவை தொடர்பாக, பா.ஜ.,வினரை மக்கள் தொடர்பு கொண்டால், வீடுகளுக்கே சென்று, அந்த சேவைகளைப் பெற உதவி செய்யப்படும்,'' என்றார்.

