ஊழல் கறை நீக்கும் அற்புத வாஷிங் மிஷின் பா.ஜ.,விடம் இருக்கிறது: ஸ்டாலின் கிண்டல்
ஊழல் கறை நீக்கும் அற்புத வாஷிங் மிஷின் பா.ஜ.,விடம் இருக்கிறது: ஸ்டாலின் கிண்டல்
ADDED : மார் 07, 2024 01:24 AM
சென்னை:''ஊழல் புகாருக்கு ஆளான எதிர்க்கட்சி பிரமுகர், திடீரென பா.ஜ., பக்கம் சென்று விட்டால், உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவுக்கு கறை நீக்கக் கூடிய அற்புத, 'வாஷிங் மிஷின்' பா.ஜ.,விடம் இருக்கிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அவரது பேட்டி:
கல்வித் துறையில், தமிழகம் முன்னிலையில் உள்ளது. மாணவர்களுக்கான 'புதல்வன்' திட்டம் நல்ல பலனை தரும்.
இந்தியாவின் மருத்துவ தலைநகர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. மக்களுக்கான மருத்துவ சேவையில், இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
'மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்' போன்ற திட்டங்கள், மனித உயிர்களின் மகத்துவத்தை உணர்த்தக் கூடியவையாக உள்ளன.
தொழில் வளர்ச்சி யில், மூன்று ஆண்டுகளில், பல கட்டங்கள் முன்னேறி, இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் உயர்ந்துள்ளது.
குனிந்து தேட வேண்டிய அளவில் இருந்த தமிழகத்தின் முன்னேற்றத்தை, மூன்றாண்டுகளில் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அளவுக்கு உயர்த்தியிருக்கிறது, திராவிட மாடல் அரசு.
பா.ஜ., ஆட்சியல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீது தான், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., ஆகியவை பாய்கின்றன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் உள்ள ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்க்கட்சி பிரமுகர், திடீரென பா.ஜ., பக்கம் சென்று விட்டால், உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்கு கறை நீக்கக் கூடிய அற்புத, 'வாஷிங் மிஷின்' பா.ஜ.,விடம் இருக்கிறது என்பதை, மக்கள் புரிந்து விட்டனர்.
தேர்தல் நெருங்க நெருங்க, பா.ஜ., அல்லாத கட்சியினர் மீதான பாய்ச்சல்கள் இன்னும் கூடுதலாக இருக்கும்.
அதை எதிர்கொள்வதற்கான வலிமை இண்டியா கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு உண்டு. பா.ஜ.,வை முழுமையாக அம்பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக, இது அமையும்.
தொண்டர்கள் எதிர்பார்ப்பது போல, தி.மு.க., ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் வகையில், நான் செயல்படுகிறேன். மத்திய அரசின் எதிர்ப்புகளோ, தாக்குதல்களோ, எனக்கோ, தி.மு.க., வுக்கோ புதிதல்ல.
எப்போதெல்லாம் ஜனநாயகத்திற்கு ஆபத்து நேர்கிறதோ, அப்போது எதிர்ப்பு குரல் கொடுக்கும் இயக்கங்களில் முதன்மையானது தி.மு.க., நல்லவற்றை ஆதரிப்பதிலும், தீமைகளை எதிர்ப்பதிலும் உறுதியாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

