ஜெயலலிதா அனுதாபிகளை வளைக்கவே மாஜிக்களை இணைத்த பா.ஜ.,
ஜெயலலிதா அனுதாபிகளை வளைக்கவே மாஜிக்களை இணைத்த பா.ஜ.,
ADDED : பிப் 08, 2024 01:51 AM
சென்னை:அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், 14 பேர்; தி.மு.க., - காங்கிரஸ் - தே.மு.தி.க.,வை சேர்ந்த தலா ஒருவர் என, மொத்தம், 17 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், டில்லியில் நேற்று, மத்திய இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சில் ஈடுபட்டு வருகின்றன.
தக்கவைக்கும் முயற்சி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது. ஏற்கனவே அக்கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்கவைக்கும்முயற்சியில் பா.ஜ.,ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், 14 பேர்; காங்கிரஸ் - தி.மு.க., - தே.மு.தி.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., தலா ஒருவர்; தி.மு.க., முன்னாள் எம்.பி., ஒருவர் என, மொத்தம், 18 பேர் நேற்று டில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர்ராஜிவ் சந்திரசேகர்முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
அப்போது, மத்தியஇணை அமைச்சர்முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
புதிய தொகுதிகள்
அவர்களை வரவேற்று ராஜிவ் சந்திரசேகர்கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் இருந்து இந்த அளவுக்கு அதிகமானோர் கட்சியில் இணைந்துள்ளது, அந்த மாநிலத்தில், பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கை காட்டுவதாக உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என,பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
தமிழகத்தில் இருந்து எங்களுக்கு புதிய தொகுதிகள் கிடைக்கும். கடந்த, 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள மாற்றங்களை பார்த்து, ஒவ்வொரு இந்தியரும், அது தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
புதியவர்கள், கட்சியில் இருப்போருடன் இணைந்து வேகமாக தேர்தல் பணியாற்றி, கட்சியை உயர்வான இடத்துக்கு கொண்டு சேர்ப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையில், ஜெயலலிதா அனுதாபிகளின் ஆதரவு ஓட்டுகளை வளைக்கவே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., கட்சியில் சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வளர்ச்சிக்கு உதவும்
இதுகுறித்து, தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:
ஜெயலலிதா, கட்சிக்காரரின் பண பலம், செல்வாக்கு போன்றவற்றை பார்த்து தேர்தலில் போட்டியிட, 'சீட்' தர மாட்டார். கட்சிக்கு விசுவாசமாக உள்ள நபருக்கு தான் சீட் வழங்குவார்.
அவர்களுக்கு, கட்சி தொண்டர்களிடமும், மக்களிடமும் நல்ல பெயர் இருக்கும்.
தற்போது பா.ஜ.,வில்இணைந்துள்ள அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலர், ஜெயலலிதாவால் சீட் வழங்கப்பட்டு, எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர்கள்.
அவர்களின் வருகையால், அந்தந்த தொகுதிகளில் ஜெயலலிதாவின் அனுதாபிகளாக உள்ள அ.தி.மு.க.,வினர் பா.ஜ., ஆதரவு நிலைப்பாடு எடுத்து பா.ஜ., பக்கம் வருவர்.
அக்கட்சிக்கே ஓட்டளிப்பர். இது, பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு உதவும்.நடப்பது எல்லாமே அண்ணாமலையின்தந்திரத்தால் விளைபவை.
இவ்வாறு அவர் கூறினார்.

