திருபுவனம் கூட்டுறவுக்கு எதிராக பா.ஜ., உண்ணாவிரத போராட்டம்
திருபுவனம் கூட்டுறவுக்கு எதிராக பா.ஜ., உண்ணாவிரத போராட்டம்
ADDED : மார் 12, 2024 02:26 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில், 5,000த்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இதில், 2,000த்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களுடன் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் இயங்குகிறது.
இந்நிலையில், திருபுவனம் பட்டுக்கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து, பா.ஜ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில், 300க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், நெசவாளர்கள் பங்கேற்றனர்.
பா.ஜ.,வினர் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில், நெசவுத் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற திருபுவனத்தில் பல கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன. 25,000த்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 20,000த்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தாண்டு பட்டு சேலை, வேட்டி விற்பனையில் மந்தம் ஏற்பட்டு, 200 கோடி ரூபாய் அளவுக்கு தேக்கமடைந்தால், நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சங்கத்திற்கு மத்திய அரசு பல நிதியை வழங்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு முறையாக அந்த நிதியை பயன்படுத்தாமல், நிர்வாகத்தை சீர்கேடு செய்து வருகிறது.
இது குறித்து நெசவாளர்கள் கேட்டால், அவர்கள் மீது நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்து தான் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இவ்வாறு கூறினர்.

