விஜயை கூட்டணிக்கு அழைத்த பா.ஜ.,: மவுனம் காப்பதால் கட்சியில் குழப்பம்
விஜயை கூட்டணிக்கு அழைத்த பா.ஜ.,: மவுனம் காப்பதால் கட்சியில் குழப்பம்
UPDATED : மார் 16, 2026 12:42 AM
ADDED : மார் 16, 2026 12:40 AM

- நமது நிருபர் -
'தனித்து நின்று, தி.மு.க., வெற்றிக்கு உதவப் போகிறீர்களா அல்லது தே.ஜ., கூட்டணியில் இணைந்து அவர்களை வீழ்த்த போகிறீர்களா' என விஜயிடம் டில்லி முக்கியஸ்தர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்க முடியாமல் விஜய் மவுனமாகி உள்ளார்.
இது தொடர்பாக த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., தனித்து நின்றாலே, 25 சதவீத ஓட்டுகளை பெறும். தேர்தல் நெருக்கத்தில் விஜய் பிரசாரத்தை தீவிரப்படுத்தினால் ஓட்டு சதவீதம் கூடும். இது, தே.ஜ., கூட்டணிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதனால்தான், கரூர் சி.பி.ஐ., வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட விஜயை, மீண்டும் விசாரணைக்காக டில்லிக்கு வரவழைத்தனர்.
விஜயுடன் டில்லி சென்ற த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர், பா.ஜ.,வைச் சேர்ந்த டில்லி முக்கியஸ்தர்களை, டில்லி கோல்ப் கிளப் அருகே, 14ம் தேதி இரவு சந்தித்து பேசினர்.
அப்போது, 'விஜய் அரசியலுக்கு வரவில்லையென்றால், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைத்து, கூட்டணி பலத்தால் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், த.வெ.க., வருகையால் எல்லாம் மாறிவிட்டது. த.வெ.க., தனித்து போட்டியிட்டால், தி.மு.க., எளிதாக வென்றுவிடும். அதைதான் விஜய் விரும்புகிறாரா. தி.மு.க.,வை வீழ்த்த, தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வரவேண்டும். கரூர் வழக்கில் கூட, இன்றுவரை பா.ஜ., தான் உதவி வருகிறது.
தே.ஜ., கூட்டணியில் இணைந்தால், விஜயின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என, தி.மு.க., தான் பிரசாரம் செய்கிறது. உண்மை அதுவல்ல. ஆரம்பத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் இப்படி யோசித்தே, கூட்டணியை தவிர்த்தார். உண்மையை அறிந்தபின், கூட்டணிக்குள் வந்து துணை முதல்வராகி விட்டார்.
த.வெ.க.,வுக்கு ஆதரவாக போலியான சர்வேக்களை தி.மு.க., தரப்பு வெளியிடுகிறது. அவர்கள் உருவாக்கும் மாயையில் வீழ்ந்தால், விஜய்க்கு தான் பாதிப்பு. தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம். தே.ஜ., கூட்டணியில் இணைந்தால் வெற்றி நிச்சயம். இதை விஜயிடம் விளக்கி சொல்லுங்கள்' என, டில்லி பா.ஜ., முக்கியஸ்தர்கள் கூறி உள்ளனர்.
இதை, இருவரும் விஜயிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் காக்கிறார். அவரின் மவுனம், கட்சியை உச்சக்கட்ட குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

