ADDED : பிப் 19, 2025 10:02 PM

கரூர்: '2026ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பஞ்சம் பிழைப்பதற்காக அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியது தான்' என்று கரூரில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் விளக்கக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போதும் இல்லாத அளவு இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தீய சக்தி தி.மு.க.,வை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். தி.மு.க.,வின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால், 'ஒரு பானை பனைமரத்து கள்ளை குடித்த குரங்கு தட்டு தடுமாறிக்கிட்டு இருக்கிறது. அப்போது, ஒரு தேள் வந்து கடிக்கிறது. கள்ளை குடித்த குரங்கை தேள் கடித்தால், அந்த குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ, அப்படித்தான் தி.மு.க., ஆட்சி நிலைதடுமாறி இருக்கிறது,'.
தி.மு.க.,வின் உதயநிதி, மகேஷ் தற்குறிகளைப் போன்று, அவர்கள் பாணியில் பேசப் போகிறேன். இதுவரையில் எந்த மேடையிலும் நான் அப்படி பேசியதில்லை. 2026ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பஞ்சம் பிழைப்பதற்காக அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியது தான்.
மோடி ஹிந்தியை எங்கே திணிக்கிறார்? யாராவது சொல்லுங்க. தமிழகத்திற்கு அவர் வந்தாலே ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். உங்களுடைய குழந்தை நன்றாக இருக்க வேண்டும் எனில் மூன்று மொழிகளை படிக்க வையுங்க என்பதை தான் சொல்கிறார். ஆனால், பொய்யைச் சொல்லி இண்டி கூட்டணி என்ற போர்வையில் உலக மகா அயோக்கியன் எல்லாம் ஒரே மேடையில் இருக்கிறார்கள்.
அமைச்சர் மகேஷின் மகன் ப்ரெஞ்ச் மொழி படிக்கிறார். ஆனால், நமது அரசு பள்ளி மாணவர்கள் இருமொழியைத் தான் படிக்க வேண்டுமாம். தி.மு.க.,காரன் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், நடுத்தர மக்கள் இரு மொழிகளை தான் படிக்கணுமாம். நடிகர் விஜய் சொந்தமாக நடத்தி வரும் விஜய் வித்யாஸ்ரம் பள்ளியில் ஹிந்தி இருக்கிறது.
2026ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுப்போம். ஒவ்வொரு நாள் பேப்பரை எடுத்து பார்த்தால், தாய்மார்களுக்கு எதிராக நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகம். 2026ல் மாற்றம் இல்லையெனில், அதன்பிறகு மாற்றம் இல்லை என்று தான் அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.