கூட்டணி குறித்து கருத்து கூற பா.ஜ.,வினருக்கு மேலிடம் தடை
கூட்டணி குறித்து கருத்து கூற பா.ஜ.,வினருக்கு மேலிடம் தடை
ADDED : மார் 29, 2025 07:35 PM
சென்னை:'கூட்டணி குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது' என தமிழக பா.ஜ.,வினருக்கு, கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., -- அ.தி.மு.க., -- பா.ஜ., - நா.த.க., - - த.வெ.க., என, ஐந்துமுனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஐந்து முனை போட்டி ஏற்பட்டால், தி.மு.க., அரசு மீதான அதிருப்தி ஓட்டுகள் பிரியும். அது தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே, தி.மு.க.,வை தோற்கடிக்க, பலம் வாய்ந்த கூட்டணி அவசியம் என, பா.ஜ., தேசிய தலைமை கருதுகிறது.
அதற்காக, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க.,- - அ.ம.மு.க., -- த.மா.கா., புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ள நிலையில், அ.தி.மு.க.,வை சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்து பேசியது, இதை உறுதிப்படுத்தி உள்ளது. வரும் நாட்களில், பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது.
எனவே, கூட்டணி குறித்தும், கூட்டணி கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்தும், யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என, கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.