பா.ஜ., கூட்டணியில் சேர சீமான் திட்டம் ஆதரவு கேட்டு ரஜினியுடன் சந்திப்பு?
பா.ஜ., கூட்டணியில் சேர சீமான் திட்டம் ஆதரவு கேட்டு ரஜினியுடன் சந்திப்பு?
ADDED : நவ 22, 2024 07:39 PM
நடிகர் ரஜினியை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
எடுத்ததுமே, தனக்கு எதிராக தன் கட்சியினரையே கொம்பு சீவி விடும் வேலையில் தி.மு.க., களம் இறங்கி இருப்பது குறித்த தன்னுடைய ஆதங்கத்தை ரஜினியிடம் கொட்டி உள்ளார் சீமான்.
'எனக்கு எதிராக கொம்பு சீவி விடப்படும் என்னுடைய கட்சியினரையும் கூட நேரடியாக கட்சியில் சேர்த்துக் கொள்ளாமல், அவர்களுக்கு தேவையானதை கொடுத்து, என்னுடைய பெயரை கெடுக்கச் சொல்கிறார்கள். அதற்கேற்ப, நேற்று வரை நாம் தமிழரில் தம்பிகளாக இருந்தவர்களெல்லாம், 'போட்டி நாம் தமிழர் இயக்கம்' துவங்கப் போவதாகச் சொல்லி, என்னை வசைபாடுகின்றனர்' என ரஜினியிடம், சீமான் வருத்தப்பட்டு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் பற்றியும், அவரது கட்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
'அவரது கொள்கையை தான் எதிர்த்தேன்; விஜயை எதிர்க்கவில்லை. அவரை சொந்த தம்பி போல பாவித்தேன். அவர் என்னை அண்ணன் என, உதட்டளவில் அழைத்து விட்டு, கட்சி துவக்கிய பின் என்னை எதிரியாக பார்க்கிறார். எங்கள் நிர்வாகிகளையெல்லாம் தன்னுடைய கட்சியான த.வெ.க.,வுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளார். என்னோடு அரசியலில் இணக்கமாக இருந்து செயல்பட்டால், எனக்கு எதிரான ஓட்டுகள் தனக்கு வராது என்று நினைத்தே, என்னுடைய கட்சியினரையே தன் பக்கம் வளைக்க முயல்கிறார். அதை அறிந்த பின் தான், நடிகர் விஜயையும், அவருடைய கட்சிக் கொள்கையையும் விமர்சித்து பேச வேண்டியதாகி விட்டது. அவரோடு அரசியல் ரீதியிலான முரண்பாடு தானே தவிர, தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.
அதோடு, ஆளும்கட்சியை வீழ்த்தும் விஷயத்தில், அனைத்து எதிர்கட்சிகளும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் என்பதில், அவருக்கு உடன்பாடான கருத்து இல்லை என கேள்விபடுகிறேன். அதனால், அவரோடு இணைந்து பயணிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.
தனித்து போட்டியிட்டு, நாம் தமிழரின் சொந்த அடையாளத்தை நிலை நிறுத்தத்தான் விரும்பினேன். ஆனால், வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் எப்படியும் தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும். வீழ்த்தினால் மட்டுமே, தி.மு.க.,வுக்கு எதிராக அரசியல் செய்வோருக்கு எதிர்காலம் இருக்கும். இது தான் யதார்த்தம். அதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
அதனால், தனித்து மட்டுமே களம் காணுவது என்கிற தீவிரமான முடிவை சற்று தளர்த்தி, வரும் தேர்தலில், என் தலைமையில் கூட்டணி ஏற்படுத்தலாமா என யோசிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய, பா.ஜ., தலைவர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஒருவேளை, அந்த முயற்சி சாதகமான முடிவை எட்டுமானால், அதற்கு முன்பாக என்னை முதல்வர் வேட்பாளராக பா.ஜ., தரப்பில் அறிவிக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவும் வேண்டும்' என, ரஜினியிடம் சீமான் கூறியிருக்கிறார்.
அதற்கு எந்த உத்தரவாதமும் தராமல் பதில் அளித்துள்ளார் ரஜினி. அதாவது, 'தற்போது அரசியல் ரீதியாக, நான் எந்த முடிவும் சொல்ல முடியாது; சொல்ல வேண்டிய நேரத்தில் முடிவை சொல்வேன்' என கூறியுள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறின.
நாம் தமிழரில் இருந்து செல்வோர் எங்கள் ஸ்லீப்பர் செல்கள்!
சந்திப்பு குறித்து, சீமான் அளித்த பேட்டி:
மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். திரையுலகம், அரசியல் என பல விஷயங்களையும் பேசினேன்.
நல்ல தலைமை யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. தற்போதுள்ள தலைவர்கள் உருவானவர்கள் அல்ல; உருவாக்கப்பட்டவர்கள். உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு அடித்தட்டு மக்களின் கவலை, பசி, கண்ணீர் எதுவும் தெரியாது.
மக்களின் கஷ்டங்களை உணர்ந்த தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை போன்றவர்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் தற்போது இல்லை. இன்று எங்கு பார்த்தாலும், ஓட்டுகள் வாங்கப்படுகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துவதாக, ஆட்சியாளர்கள் தங்களுக்கு தாங்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்கின்றனர். நல்ல ஆட்சி நடத்தினால், ஓட்டுக்கு காசு கொடுத்து, ஏன் மக்களை விலை பேச வேண்டும்?
இங்கு சேவை அரசியல் இல்லை; செய்தி அரசியல் மட்டுமே இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அதற்கான அரசியல் மட்டும் செய்கின்றனர். மக்களுக்கான அரசியல் ஒருபோதும் செய்யப்படுவதில்லை.
இப்படி அரசியல் சிஸ்டமே தவறாக இருப்பதால் தான், அதை மாற்ற வேண்டும் என, ரஜினி கூறினார். இதைத் தான் நானும் சொல்லி வருகிறேன். அமைப்பு ரீதியில் தவறு இருக்கிறது என நான், தமிழில் சொல்கிறேன். இந்த சிஸ்டத்தில் இருக்கும் தவறை எப்படி களைய வேண்டும் என்பது குறித்து தான், ரஜினியை சந்தித்துப் பேசினேன்.
சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று பொருள். சங் பரிவாரிலிருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் தெரியுமா? எங்களை சங்கி என்று சொல்பவர்கள் தான்.
பிரதமரை காலையில் மகனும், மாலையில் அப்பாவும் சந்திக்கின்றனர். எதற்கு சந்தித்தோம் என்பதை, இது நாள் வரை சொல்லவில்லை. ஆனால், ரஜினியை ஒளிவு மறைவின்றிதான் நான் சந்திக்கிறேன். அதை வெளியிலும் சொல்கிறேன். ஏனென்றால், இதில் கள்ளத்தனம் இல்லை; நல்லத்தனம் தான் உள்ளது.
எங்கள் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகுவது குறித்துக் கேட்கின்றனர். அவர்களை மாற்றுக் கட்சிக்கு அனுப்பி வைத்திருப்பதே, நாங்கள் தான். வெவ்வேறு இயக்கங்களுக்குச் சென்று, எங்களுக்காக அவர்கள் உளவு பார்த்து தகவல் சொல்வர். அதாவது எங்களுடைய 'ஸ்லீப்பர் செல்'கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -