திருப்பரங்குன்றம் மலை விவகாரம் போராட்டத்தின் பின்னணியில் பா.ஜ., *அமைச்சர் சேகர்பாபு கொதிப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் போராட்டத்தின் பின்னணியில் பா.ஜ., *அமைச்சர் சேகர்பாபு கொதிப்பு
ADDED : பிப் 05, 2025 07:16 PM
சென்னை:''முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் மலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தயவு செய்து ஹிந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். பா.ஜ.,வினர் தான் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க நினைக்கின்றனர்; மதுரை பழங்காநத்தத்தில் நடந்த போராட்டம் தேவையற்றது.
பா.ஜ., தலைவர்கள் எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், முதல்வர் எங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லி இருக்கிறார். வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள்; உங்கள் எண்ணம் தமிழகத்தில் ஈடேறாது. தேவையானால், முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவார்.
திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தவரை, 1920ம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றமும், 1930ல் லண்டன் பிரிவு கவுன்சிலும் ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, 1958, 1975, 2004, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.
இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்றார்போல்தான், இந்த அரசு செயல்பட்டு வருகிறது. விரைவில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வேன். அங்குள்ள கருத்து வேறுபாடுகள், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தீர்வு காணப்பட்டு வருகின்றன.
இந்த பிரச்னை வாயிலாக, தேர்தலில் லாபம் பார்க்க பா.ஜ., துடிக்கிறது. ஆனால், வரும் தேர்தலில் அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பழனி தைப்பூசத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன. தினசரி, 20,000 பேர் என, 10 நாட்களுக்கு, இரண்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.