புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., -எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி
புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., -எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி
ADDED : டிச 22, 2024 02:04 AM

அடுத்தடுத்து கவர்னரை சந்தித்ததால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி, ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி கேட்டு வருகின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரியில் களம் இறங்கிய லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட துவங்கினர்.
கூடவே, பஞ்சாலை தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டு, தொழிலாளர்கள் கோரிக்கைக்கு ஆதரவளித்தனர்.
இப்படி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது, கூட்டணியில் அங்கம் வகித்து, அரசை தலைமையேற்று நடத்தும் என்.ஆர்.காங்., தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமிக்கு, பா.ஜ., மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. தன்னுடைய அதிருப்தியை அவர் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சட்டசபை பா.ஜ., தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., ஆகியோர் கடந்த வாரம் டில்லி சென்று, கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, அரசுக்கு எதிராக நடக்கும் மூன்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதைஅடுத்து, அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அங்காளன் ஆகியோர் தனித் தனியாக சட்டசபை செயலரிடம் கடிதம் அளித்தனர்.
இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் நேற்று மதியம் திடீரென கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.
அப்போது, சபாநாயகர் செல்வம் கவர்னர் மாளிகை வந்தார்.
கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் கூறியதாவது:
நாங்கள் தனி அணியாக செயல்படவில்லை. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, எங்களது நிலைப்பாட்டை உரிய நேரத்தில் கூறுவோம்.
சபாநாயகர் செல்வத்திற்கு நெருக்கடி கொடுப்பதன் வாயிலாக, பா.ஜ., தலைமை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமால் இருக்க நாங்கள் முயற்சிப்பதாக கூறுவது தவறு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.