'குறைந்த மின்கட்டண பிரிவுக்கு சிறுதொழில்களை மாற்றணும் பா.ஜ.,' : அண்ணாமலை வலியுறுத்தல்
'குறைந்த மின்கட்டண பிரிவுக்கு சிறுதொழில்களை மாற்றணும் பா.ஜ.,' : அண்ணாமலை வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 06:17 AM

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின்கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும் தி.மு.க., அரசு, விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில் துறையினரை ஏமாற்றி வருகிறது.
இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும், 12 கிலோ வாட் மின் சுமைக்கு குறைவாக பயன்படுத்தும் சுமார் 52,367 சிறு தொழிற்சாலைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டண உயர்வால், இந்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. எனவே, மின் இணைப்பு வகையை மாற்ற, இந்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
இதை அரசும் ஏற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால், மின்கட்டணம், 1 யூனிட்டுக்கு 9.60 ரூபாயில் இருந்து 4.65 ரூபாயாக குறையும்.
இக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்று, ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம், உயர்த்தப்பட்ட மின்கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து, தொழில் அமைப்புகள் கேட்டதற்கு, 'தானியங்கி முறையில் மின்சாரத்தை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்கள், மின் இணைப்பு வகையை மாற்ற தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதை, அப்போதே தெரிவித்திருந்தால், பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும்.
அதிக கட்டணப் பிரிவுக்கு தானாகவே மாற்றம் செய்ய முடியும்போது, குறைந்த கட்டணப் பிரிவுக்கு மாற்றம் செய்வதற்கு தனியாக விண்ணப்பிக்க சொல்வது தொழில் துறையினரை ஏமாற்றும் செயல்.
இனியும் தாமதிக்காமல், உடனடியாக குறைந்த மின்கட்டண பிரிவுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மாற்ற வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசூலித்த, அதிக கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

