பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைக்க பா.ஜ., முயற்சி
பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைக்க பா.ஜ., முயற்சி
UPDATED : டிச 20, 2025 02:54 AM
ADDED : டிச 20, 2025 02:53 AM

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை அகற்றவும், தேர்தல் பிரசாரத்தை துவக்கவும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள, 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழா மேடையில், பிரதமர் மோடியுடன், தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பங்கேற்க வைக்க, தமிழக பா.ஜ., முயற்சி மேற்கொண்டுள்ளது.
பீஹார் மாநில சட்டசபை தேர்தல் வெற்றி போல், தமிழகத்தில், 'அ.தி.மு.க., தலைமையில். தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்' என, பா.ஜ., டில்லி மேலிடம் அறிவித்துள்ளது.
தே.ஜ., கூட்டணியில் தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி போன்றவை உள்ளன.
தொகுதி பங்கீடு
பா.ம.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணி போன்றவற்றையும் கூட்டணியில் இணைத்து, தி.மு.க., ஆட்சியை வீழ்த்த, பா.ஜ., டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பைஜெயந்த் பாண்டாவுக்கு, தமிழக விபரம் தெரியாததால், ஏற்கனவே அ.தி.மு.க.,வினருடன் நெருக்கமாக இருந்த, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக டில்லி மேலிடம் நியமித்துள்ளது. சமீபத்தில் அ.தி.மு.க., ெபாதுச்செயலர் பழனிசாமியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்ட விஷயங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கொண்டு சென்றார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து, பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து பேச, வரும் 23ம் தேதி மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சென்னை வர உள்ளார்.
கடந்த 17ம் தேதி பழனிசாமி சார்பில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சண்முகம், தனபால் மற்றும் நயினார் நாகேந்திரன் சார்பில், தமிழக பா.ஜ., துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோபால்சாமி ஆகியோர் டில்லி சென்றனர். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினர்.
பொங்கல் விழா
இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் துவக்கிய, 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற மக்கள் சந்திப்பு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை, வரும் ஜன., 9ல் நடத்தவும், அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பங்கேற்க வைக்கவும் திட்டமிடப்பட்டது. தற்போது அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவையொட்டி, மதுரை அல்லது தஞ்சாவூர் மாவட்டத்தில், பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் விழா நடத்தினால், அருகில் உள்ள புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. எனவே, புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினால், மதுரையில் பொங்கல் விழா நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜன., 9ல் புதுக்கோட்டையில் பா.ஜ., சார்பில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கூட்டம் காரணமாக, அமித் ஷா தமிழகம் வருவது தள்ளி வைக்கப்பட்டது. இம்மாதம் இறுதியில், அவர் தமிழகம் வர உள்ளார். அதன்பின், பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் விழா மற்றும் பொதுக்கூட்டம் தேதி விபரம் தெரிய வரும்.
விமர்சிக்க வேண்டாம்
இதற்கிடையில், பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடையில், பிரதமருடன், பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோரை பங்கேற்க வைத்து, கூட்டணியை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், டில்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது, தி.மு.க.,வுக்கு மத்திய அரசு நெருக்கடி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதை கேட்டுக் கொண்ட நிர்மலா சீதாராமன், தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
எனவே, விஜய் குறித்து, அ.தி.மு.க, - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

