தமிழகத்தின் மீது பா.ஜ., நடத்தும் கலாசார போர்: எம்.பி., சிவா
தமிழகத்தின் மீது பா.ஜ., நடத்தும் கலாசார போர்: எம்.பி., சிவா
ADDED : ஜூன் 19, 2025 01:32 AM

மதுரை: ''கீழடி ஆராய்ச்சிகளில் கிடைத்த ஆதாரங்களை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இதனால் தமிழகத்தின் மீது பண்பாடு, கலாசார போரை பா.ஜ., நடத்துகிறது,'' என மதுரையில் தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிவா எம்.பி., பேசினார்.
அவர் பேசியதாவது:
மதுரை அருகே உள்ள கீழடி அகழாய்வில் 17,914 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவை சங்ககால தமிழர்கள், நகர நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளாக விளங்குகின்றன.
கீழடி ஆராய்ச்சி முடிவுகளின்படி தமிழர்கள் நாகரிகம் கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுக்கு முந்தையது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்காமல் அரசிதழில் வெளியிட மறுக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என பா.ஜ., மாற்ற முயற்சிக்கிறது.
இரும்பை முதன் முதலில் கண்டுபிடித்த பெருமை தமிழனுக்கு உரியது. 2500 ஆண்டுக்கு முன் வேளாண் தொழில் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. ஆதிச்சநல்லுார், சிவகளை, கீழடி ஆராய்ச்சிகளில் கிடைத்த ஆதாரங்களை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இதனால் தமிழகத்தின் மீது பண்பாடு, கலாசார போரை பா.ஜ., நடத்துகிறது.
மத்திய தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடி ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை ஆய்வகத்திற்கு அனுப்பி அறிவியல் முறையில் அறிக்கை அளித்தார்.
அவரை தொடர்ந்து பணியிட மாற்றம் செய்து வருகின்றனர். பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கீழடி பிரச்னையை எழுப்புவோம். கீழடி பிரச்னை, மக்கள் போராட்டமாக மாற வேண்டும். தமிழர் வரலாறு காப்பாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.