பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதை பா.ஜ., அனுமதிக்காது: நாகேந்திரன்
பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதை பா.ஜ., அனுமதிக்காது: நாகேந்திரன்
ADDED : மே 31, 2025 03:29 AM

சென்னை: 'பஸ் கட்டணத்தை உயர்த்தி, மக்களின் தோள்களில் மீண்டும் சுமையை ஏற்றிவிட்டு, வேடிக்கை பார்க்கலாம் என்ற தமிழக அரசின் கனவு ஒருநாளும் நிறைவேறாது, அதை பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்த, தி.மு.க., அரசு முடிவு செய்து, மக்களிடம் கருத்து கேட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது, அடுத்த நாடகத்தை அரங்கேற்ற அரசு தயாராகி விட்டது என்பதை காட்டுகிறது.
விழி பிதுங்கும் மக்கள்
பஸ் கட்டண உயர்வு குறித்து, உயர் நீதிமன்றம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சொன்னதும், அதற்காக மக்களிடம் கருத்து கேட்பதும் சரிதான்.
ஆனால், மக்களின் விருப்பங்களுக்கும், கருத்துக்கும், இந்த ஆட்சியில் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளதா என்பதுதான் இங்கே பிரச்னையே.
மக்களின் மனதுப்படி தான், இந்த ஆட்சி நடக்கிறது என்றால், அனைவருக்கும் சம கல்வி வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை அரசு எப்போதோ ஏற்றுக் கொண்டிருக்கும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், மின்கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, ஆவின் பால் விலை, முத்திரை கட்டணம் என, தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வால், தமிழக மக்கள் விழி பிதுங்கிக் கிடக்கின்றனர்.
அவர்கள், அன்றாடப் போக்குவரத்துக்கு தேவையான பஸ்களின் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புக் கொள்வரா?
பஸ்களின் தரத்தை உயர்த்தாத அரசு, அதன் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதை, மக்கள் எப்படி அனுமதிப்பர். மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு, அரசு செவி சாய்க்குமா என்ன? ஆட்சிக்காலம் முடிவதற்குள், மீதமிருக்கும் பஸ் கட்டணத்தையும் உயர்த்தி, முடிந்தவரை கொள்ளை அடிக்க அரசு முடிவு செய்துவிட்டது.
கண் துடைப்பு
மக்களிடம் கருத்து கேட்பதாகக் கூறி, விளம்பரம் செய்வதெல்லாம், வெறும் கண் துடைப்பு நாடகம்.
பஸ் கட்டணத்தை உயர்த்தி, மக்களின் தோள்களில் மீண்டும் சுமையை ஏற்றிவிட்டு, வேடிக்கை பார்க்கலாம் என்ற அரசின் கனவு ஒருநாளும் நிறைவேறாது, அதை தமிழக பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது.
இதை, முதல்வர் ஸ்டாலின் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே, பஸ் கட்டண உயர்வு என்ற எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் முடிவை, அரசு உடனே கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

