அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் * காங்கிரஸ் அறிவிப்பு
அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் * காங்கிரஸ் அறிவிப்பு
ADDED : ஏப் 10, 2025 06:58 PM
சென்னை:'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கிறது.
அரசியல் கட்சிகளை தன் அதிகார பலத்தால் அச்சுறுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில், அடிக்கடி தமிழகத்திற்கு வந்து, அரசுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை, அமித் ஷா கொடுக்கிறார்.
சில ஆண்டுகளாக, கவர்னரை பயன்படுத்தி, தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார். அதற்கு பாடம் புகட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது
அம்பேத்கரை பார்லிமென்டில் இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக, சென்னைக்கு இன்று வருகிறார். அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில், என் தலைமையில், மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில், இன்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

