'பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொல்வது முற்போக்கு சமூகத்தின் தரத்தை சீரழித்து விடும்!'
'பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொல்வது முற்போக்கு சமூகத்தின் தரத்தை சீரழித்து விடும்!'
ADDED : டிச 29, 2024 04:31 AM

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி, தனக்கு நேர்ந்த துயரச் சம்பவம் குறித்து, தைரியத்துடன் புகார் அளித்தது பாராட்டுக்குரியது' என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வராத வரை, குற்றவாளிகள் இதுபோன்ற குற்றங்களை செய்து கொண்டே இருப்பர்' என்றும் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் கூறியதாவது:
வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், பழைய குற்றவாளி. அவர் மீது, இதே போன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கைதான நபர், சரித்திர பதிவேடு குற்றவாளி என, போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.
தலையாய கடமை
இருப்பினும், தொடர்ந்து அவர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டரா என்பது தெளிவாக தெரியவில்லை. அண்ணா பல்கலை வளாகத்தில், முன்னரும் இதுபோன்ற பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன.
சில சம்பவங்கள், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு தெரியும். ஆனால், புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
வழக்கில் கைதானவர் தி.மு.க., நிர்வாகி என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விசாரணை துவக்க கட்டத்தில் இருப்பதால், அந்தக் குற்றச்சாட்டுகளை, இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள விரும்பவில்லை. இந்த மாதிரியான குற்றத்திற்கு, அரசியல் சாயம் முக்கியமில்லை. முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இது, சட்டப்படி குற்றம். பாதிக்கப்பட்ட நபரின் விபரங்களை, போலீஸ் அல்லது யார் வெளியிட்டாலும் குற்றமாகும்.
முதல் தகவல் அறிக்கை நகலை பார்த்த போது, பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியத்தைப் பாதுகாக்க தவறும் வகையில், அதில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக, எப்போதும் தார்மீக ரீதியாக தண்டிக்கப்படுகின்றனர். ஆண் அல்லது பெண், இவற்றில் யார் அதிக சக்தி வாய்ந்தவர் என்பது விவாதம் அல்ல. முக்கிய விஷயம் என்னவெனில், ஒரு வாழ்க்கை தொடர்புடையது.
பெண் என்பவள் தனக்கென உரிமைகள், சுதந்திரம் மற்றும் பார்வை உடையவள். தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவளது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை தியாகம் செய்யுமாறு, எந்த ஒரு சமூகமும் அல்லது நிறுவனமும் கட்டளை இடக்கூடாது. பெண்களை பாதுகாப்பது, அரசு மற்றும் சமூகத்தின் தலையாய கடமை.
அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு உண்டு. அரசியலமைப்பு சட்டம், ஆண், பெண் என்ற வேறுபாட்டை கூறவில்லை. இந்த சமூகம், பெண்ணை அவமானப்படுத்த வெட்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை, குற்றவாளிகள் சாதகமாக கருதுகின்றனர்.
சீரழிக்கும் செயல்
ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்று ஆணையிட, சுதந்திர நாட்டில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது, அவளது வாழ்க்கை; அவள் உடல்; அவளுடைய விருப்பம். ஆண்களும் சமூகமும், ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவதற்கு உழைக்க வேண்டும். மாறாக, அவர்களின் செயலால் சிதைத்து விடக்கூடாது.
இதுதான் ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அடிப்படை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறுவதும், அவமானப்படுத்துவதும் முற்போக்கு சமூகத்தின் தரத்தை சீரழிக்கும் செயல்.
பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்துவது, குற்றம்சாட்டுவது போன்ற செயல்கள், ஒருவரின் ஆன்மாவை கொல்லும். ஒவ்வொரு ஆணும், பெண்ணை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெண்ணுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதை விட, பெண்ணை எப்படி மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை, சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முக்கியமானது
வழக்கில் எப்.ஐ.ஆர்., வெளியானது துரதிருஷ்டவசமானது. இது பாதிக்கப்பட்டவரின் அவமானத்திற்கு வழி வகுத்துள்ளது. எப்.ஐ.ஆர்., வெளியானது, தனியுரிமைக்கான உரிமையை மீறியது மட்டுமல்லாமல், கண்ணியத்திற்கான உரிமையையும் பறித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மிகவும் மன வேதனை மற்றும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது; வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தவறு அல்லது தொழில்நுட்ப பிரச்னையால், இது நடந்துள்ளது என்று கூறினாலும், இதுபோன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், இதுபோன்ற பிழைகள் இடம் பெறக் கூடாது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.
எப்.ஐ.ஆர்., வெளியானது பெரிய குறைபாடாகும். கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கும். அனைத்து விவரங்களுடன் பொது வெளியில் எப்.ஐ.ஆர்., வந்தால், பாதிக்கப்பட்டவர்கள், இதுபோன்ற குற்றங்கள் குறித்து புகாரளிக்க முன்வர தயங்குவர்.
வெளியான இந்த விபரங்களால், அவர்களின் சமூக வாழ்க்கையை சீர்குலைப்பது மட்டுமின்றி, விசாரணைக்கும் இடையூறாக இருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்டவர் துன்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி, குற்றவாளிகள் மீண்டும் பெண்களுக்கு எதிராக, இதுபோல குற்றங்களை தயக்கமின்றி செய்யவும் வழிவகுத்து விடும். எனவே, இது தீவிரமாக பார்க்கப்பட வேண்டும். இதுகுறித்த விசாரணை மிகவும் முக்கியமானது.
பாதிக்கப்பட்டவரது விபரங்களின் ரகசியத்தன்மை என்பது மிக முக்கியமானது. இந்த வழக்கில் தைரியத்துடன் புகார் அளித்த பெண்ணை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், குற்றங்கள் குறித்து புகாரளிக்க முன்வராத வரை, குற்றவாளிகள் இதுபோன்ற குற்றங்களை செய்து கொண்டே இருப்பர்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.