UPDATED : நவ 12, 2026 09:57 PM
ADDED : நவ 12, 2026 09:52 PM
சென்னை: ‘தமிழகத்தில், புதிதாக மூன்று கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது’ என, மாநில சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
துாய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, குளிப்பதற்கான கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட, 33 சர்வதேச தர நிலைகளின் அடிப்படையில், கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த தர நிலைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகிறதா என்பதை, தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீட்டு குழுக்கள் ஆய்வு செய்த பின், அங்கீகாரம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.
அதன்படி, கோவளம் கடற்கரைக்கு, 2021ம் ஆண்டு முதல் முறையாக நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டது. நடப்பாண்டு நீலக்கொடி அங்கீகாரத்தை, கோவளம் கடற்கரை தக்க வைத்துள்ளது. கடலுார் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரை ஆகியவற்றுக்கும், 2026 – 27ம் ஆண்டுக்கான சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் முதல் முறையாக தற்போது கிடைத்துள்ளது.
இதன் வாயிலாக, தமிழகத்தில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை, நான்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில், நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
