கட்சி தாவிய அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான விசாரணை நிறைவு
கட்சி தாவிய அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான விசாரணை நிறைவு
UPDATED : நவ 12, 2026 09:57 PM
ADDED : நவ 12, 2026 09:52 PM
சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,விற்கு தாவிய எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்வது தொடர்பான இறுதி கட்ட விசாரணை முடிவடைந்தது.
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மதுராந்தகம் – மரகதம் குமரவேல்; தாராபுரம் – சத்யபாமா; பெருந்துறை – ஜெயகுமார்; அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா ஆகியோர் வெற்றி பெற்றனர். பதவி ஏற்ற சில நாட்களிலேயே, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில், சபாநாயகர் பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தகுதி நீக்கம் தொடர்பாக விசாரணை நடத்தி, இரண்டு மாதங்களுக்கள் முடிவை அறிவிக்க வேண்டும் என, சபாநாயகர் பிரபாகருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில், சபாநாயகர் பிரபாகர் சமீபத்தில் விசாரணை நடத்தினார். இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடந்தது.
இதில், அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், எம்.பி., இன்பதுரை உள்ளிட்டோர் ஆஜராகினர். த.வெ.க., தரப்பில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜரானார். இரு தரப்பினரிடமும் சபாநாயகர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிந்ததும், த.வெ.க., வழக்கறிஞர் சூரியபிரகாசம் கூறியதாவது:
ஜெயகுமர், சத்யபாமா, மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோரை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சபாநாயகரிடம் மனு அளித்தார். ஆனால், விசாரணைக்கு ஆஜராகி, தன்னிடம் உள்ள ஆவணங்களை அவர் தரவில்லை. அவர் சார்பில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி சாட்சியம் சொல்ல முடியாது. எனவே, நேரடியாக பழனிசாமி ஆஜராகாததால், அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என, சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். இறுதி விசாரணை முடிந்த நிலையில், சபாநாயகர் தீர்ப்பை வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:
நான்கு பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக, சபாநாயகரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம். அவர் கவனமாக கேட்டுக்கொண்டார். கட்சி தாவியவர்கள் மீது, தகுதி நீக்க நடவடிக்கையை, சபாநாயகர் எடுப்பார் என, உறுதியாக நம்புகிறோம். இதுபோல, ஏற்கனவே பல வழக்குகள் நடந்துள்ளன. பொதுச்செயலர் ஆஜராகவேண்டிய அவசியம் இல்லை.
அவருக்கு பதிலாக கொறடா ஆஜராகி உள்ளார். அனைத்து அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களும், ஒருமனதாக சட்டசபை குழு தலைவராக பழனிசாமியை தேர்வு செய்தனர். அவர் கொறடா உள்ளிட்டவர்களை தேர்வு செய்தார். எனவே, பழனிசாமிக்கு பதிலாக, நாங்கள் ஆஜராகி உள்ளோம். சபாநாயகர் விரைந்து தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.
