ADDED : மார் 06, 2024 02:03 AM
சென்னை:தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. இது, கடும் வெயிலால் இந்தாண்டு ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை தாண்டியது. இனி வரும் நாட்களில் மின் தேவை அதிகரித்து, ஏப்ரல், மே மாதங்களில், 20,000 மெகாவாட்டை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரமும், மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் போதாது. அதனால், குறுகிய கால ஏற்படாக, இம்மாதம், 3,571 மெகா வாட் மின்சாரம் வாங்க, வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதில், 600 மெகா வாட், பரிமாற்றம் முறையில் வாங்கப்படுகிறது.
இந்த மின்சாரம், ராஜஸ்தான், பஞ்சாப், உ.பி., டில்லி மாநிலங்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. அந்த மின்சாரத்திற்கு பணம் தரப்படாது; தமிழகத்தில் காற்றாலை சீசன் துவங்கியதும், பரிமாற்ற முறையில் வாங்கப்படும் மின்சாரம் திரும்ப வழங்கப்படும்.
அடுத்த மாதம், 4,321 மெகா வாட் வாங்கப்பட உள்ளது. அதில், 600 மெகா வாட் பரிமாற்ற முறையிலான மின்சாரம். மீதி, மின் கொள்முதல்.

