வரும் 24ல் ஊதிய உயர்வு பேச்சு வாரிய ஊழியர்களுக்கு அழைப்பு
வரும் 24ல் ஊதிய உயர்வு பேச்சு வாரிய ஊழியர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 20, 2025 07:10 AM
சென்னை: அதிக பணிச்சுமையால், 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குமாறு, மின் வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் தலைமை பொறியாளர்கள் முதல் களப்பிரிவு ஊழியர்கள் வரை பாரபட்சமின்றி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023 டிச., 1ம் தேதி முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இதில் தாமதம் செய்வதை கண்டித்தும், விரைவாக வழங்குமாறும், தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையடுத்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, வரும் 24ம் தேதி காலை 11:30 மணிக்கு பேச்சு நடத்த வருமாறு, 19 தொழிற்சங்கங்களுக்கு, மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு சங்கத்தின் சார்பில் மூன்று நபருக்கு மேல் பங்கேற்க கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், 'மொத்த பணியிடங்களில், 50,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
'இதனால் ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்' என, வலியுறுத்தினர்.