248 இடங்களில் நிலத்தடிநீர் குறைவு வாரிய அதிகாரிகள் கவலை
248 இடங்களில் நிலத்தடிநீர் குறைவு வாரிய அதிகாரிகள் கவலை
ADDED : டிச 17, 2024 05:37 AM
சென்னை : தமிழக குடிநீர் வாரியம் வாயிலாக, காவிரி, கொள்ளிடம், பாலாறு, கொசஸ்தலையாறு, பெண்ணையாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் வாயிலாக, 600க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மட்டும், தர்மபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், 248 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டு வருவதால், இந்த கூட்டு குடிநீர் திட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ளது.
முன்னர், 50 அடியில் எடுக்கப்பட்ட நீர், தற்போது, 100 அடிக்கும் கீழே சென்றுள்ளது.
இதனால், கோடை காலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. நீரை உறிஞ்சுவதற்கு, கூட்டு குடிநீர் திட்ட மோட்டார்கள் அதிக நேரம் இயங்க வேண்டியுள்ளது.
இதனால், மின் செலவும் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், கடல் நீர் ஊடுருவும் அபாயமும் உள்ளது. எனவே, தமிழக குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நிலத்தடி நீரை சேமிப்பதற்கு, பல இடங்களில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும்.
இதற்கு போதிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக, நிதித்துறையிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.