காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அனுமதி கேட்கும் வாரியம்
காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அனுமதி கேட்கும் வாரியம்
ADDED : ஜூலை 12, 2025 07:55 PM
சென்னை:பொது - தனியார் கூட்டு முயற்சியில், 22 மெகா வாட் திறனில் காற்றாலை, 18 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை, கோவையில் மின் வாரியத்திற்கு, 17 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இதற்காக, 110 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை, 1986 - 1990 காலகட்டத்தில் அமைக்கப்பட்டவை. தற்போது செயல்படாமல் உள்ளன.
எனவே, திறன் குறைந்த பழைய காற்றாலைகளை அகற்றி விட்டு, அந்த இடங்களில், 22 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையமும், 18 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையமும் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், இத்திட்டம் பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்ட பணிகளை மேற்கொள்ள, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
இதற்கு அனுமதி கிடைத்தும் அடுத்த மாதத்திற்குள் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரவும், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை துவக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் இடம் வழங்கும். அங்கு தனியார் நிறுவனம் சொந்த செலவில், மின் நிலையம் அமைக்க வேண்டும். அதனிடம் இருந்து, 25 ஆண்டுகளுக்கு வாரியம் மின்சாரம் வாங்கும்.