வீடு ஒதுக்கீட்டாளர் பெயர்கள் வெளியீடு; மோசடியை தடுக்க வாரியம் நடவடிக்கை
வீடு ஒதுக்கீட்டாளர் பெயர்கள் வெளியீடு; மோசடியை தடுக்க வாரியம் நடவடிக்கை
ADDED : அக் 28, 2025 07:37 AM

சென்னை : அரசு ஒதுக்கீட்டு வீடு விற்பனை என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுவோரிடம், பொது மக்கள் ஏமாறாமல் இருக்க, அசல் ஒதுக்கீட்டாளர்கள் விபரங்களை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.
இந்த வாரியம், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. சென்னை உட்பட, 34 மாவட்டங்களில், 467 இடங்களில், 2.25 லட்சம் வீடு, மனைகள், இதுவரை ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, வீடு, மனை ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், வாரியம் ஒதுக்கீடு செய்த வீட்டை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக, தரகர்கள் பேரம் பேசுகின்றனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஐந்து முதல் எட்டு லட்சம் ரூபாய்க்கு வாரிய வீடுகள் வழங்குவதாக கூறி, மக்களிடம் பணம் வசூலித்த பின், இந்த கும்பல் தலைமறைவாகி விடுகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் வாரியத்திடமும், காவல் துறையிலும் புகார் கொடுத்து காத்திருக்கின்றனர். இதுபோன்று, தனிநபர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, வாரியம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இருப்பினும், இதில் மோசடி தொடர்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மோசடியை தடுக்கும் வகையில், வாரியத்தின் அனைத்து திட்டங்களிலும் யார் யார் ஒதுக்கீட்டாளர்கள் என்ற விபரத்தை, இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்.
ஒதுக்கீட்டாளர் பெயர், ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டின் விபரம், ஆண்டு, திட்டப்பகுதி உள்ளிட்ட விபரங்கள், இதில் இடம்பெற்றுள்ளன. யாராவது வீடு விற்பதாக வந்தால், மக்கள் இந்த விபரங்கள் வாயிலாக, ஒதுக்கீட்டாளர் குறித்த உண்மை தன்மையை அறியலாம்.
இதேபோன்று, திட்டப்பகுதி வாரியாக ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ள வீடுகள் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

