ஆதிதிராவிட மாணவர்களுக்கு சோப்பு, எண்ணெய் குறைந்தது 'தாட்கோ'வில் கோல்மால்
ஆதிதிராவிட மாணவர்களுக்கு சோப்பு, எண்ணெய் குறைந்தது 'தாட்கோ'வில் கோல்மால்
ADDED : அக் 28, 2025 07:36 AM

சென்னை: ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறைவாக, 'பொலிவு கிட்' சப்ளை செய்யப்படுவதால், அவற்றை திருப்பி அனுப்ப, விடுதி காப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான, 'தாட்கோ' சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., விடுதி மாணவர்களுக்கு, சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய, 'பொலிவு பராமரிப்பு பெட்டகம்' வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான ஊக்கத் தொகை, தாட்கோ நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு, தாட்கோ வழியாக, 'பொலிவு கிட்' வழங்கப்படுகிறது.
இம்முறையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான சோப்பு, எண்ணெய் வழங்குவதை கைவிட்டு, பழைய முறைப்படி, ஊக்கத் தொகையை வங்கி கணக்கில் செலுத்துமாறு, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் தாட்கோ அதிகாரிகள், இத்திட்டத்தை கைவிடவில்லை. மாறாக, ஆதிதிராவிடர் நல விடுதிக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த பொலிவு கிட், தற்போது பழங்குடியினர் நல விடுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ - மாணவியர் விடுதிக்கும் வழங்குவதற்கான முயற் சியை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல மாவட்ட விடுதியில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கு குறைவாக, பொலிவு கிட் சப்ளை செய்யப்பட்டு உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பொலிவு கிட்டை யாருக்கு வழங்குவது என தெரியாமல், விடுதி காப்பாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள் கூறியதாவது:
மதுரை மாடக்குளம் முதுகலை மாணவர்கள் விடுதியில், 72 பேர் உள்ளனர். ஆனால், 50 கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், மதுரை பாலிடெக்னிக் விடுதியில், 48 மாணவர்களில், 30 பேருக்கு தான் கிட் வழங்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் அனைத்திலும் இந்த நிலை தான். எனவே, இந்த பொலிவு கிட்டை, தாட்கோவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

