'சஸ்பெண்ட்' ஆன ஊழியர் பெயர் வலைதளத்தில் வெளியிடும் வாரியம்
'சஸ்பெண்ட்' ஆன ஊழியர் பெயர் வலைதளத்தில் வெளியிடும் வாரியம்
ADDED : ஏப் 20, 2025 01:58 AM
சென்னை: பணியாளர்கள் தவறு செய்வதை தடுக்க, லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர்களின் விபரங்களை, மின் வாரியம், சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
புதிய மின் இணைப்பு வழங்குவது, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்காக விண்ணப்பம் செய்வோரிடம், சில பணியாளர்கள் லஞ்சம் கேட்கின்றனர். லஞ்சம் வாங்கும் போது பிடிபடுவோர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர்.
இது தவிர, மின் தடை புகார் மீது நடவடிக்கை எடுக்காதது, மின் கட்டணம் வசூலில் முறைகேடு, அலுவலகத்திற்கு சரியாக வராதது உள்ளிட்ட செயல்கள் காரணமாக, பணியாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் பணியாளரிடம் மட்டுமே, அதற்கான ஆணை வழங்கப்படும். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்படுவோரின் விபரங்களை, மின் வாரியம், 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்த திடீர் நடவடிக்கை குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வலைதளத்தில் பதிவிடப்படும் தகவலை பலரும் பார்ப்பர்.
'எனவே, தவறு செய்தால், தங்களுக்கும் இதே நிலை வரும் என்று கருதி, பணியாளர்கள் லஞ்சம் வாங்குவது, வேலையில் அலட்சியம் போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்' என்றார்.