கரூர், திருவாரூரில் சூரியசக்தி மின் நிலையம்: 'பேட்டரி' வசதியுடன் அமைக்கிறது வாரியம்
கரூர், திருவாரூரில் சூரியசக்தி மின் நிலையம்: 'பேட்டரி' வசதியுடன் அமைக்கிறது வாரியம்
ADDED : ஏப் 20, 2025 12:35 AM

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, கரூர், திருவாரூர் மாவட்டங்களில், தலா 15 மெகாவாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்களை, 'பேட்டரி ஸ்டோரேஜ்' வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாதகமான மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி பல்வேறு தனியார் நிறுவனங்கள், தமிழக மின் வாரியத்திற்கு விற்கவும், சொந்த பயன்பாட்டிற்கும், சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து உள்ளன.
ஒட்டு மொத்தமாக, 9,151 மெகாவாட் திறனில், இந்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், உடனுக்குடன் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் இருப்பது போல, நம் நாட்டிலும் சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்தை, 'பேட்டரி' கட்டமைப்பில் சேமித்து வைத்து, மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே, தமிழகத்தில் துணைமின் நிலையங்களில் உள்ள காலியிடங்களில், ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகா வாட் பசுமை மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் பேட்டரி வசதியை ஏற்படுத்தும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த பிப்ரவரியில், 'டெண்டர்' கோரப்பட்டது.
இந்நிலையில், முதல் முறையாக திருவாரூர் மற்றும் கரூரில் தலா, 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை, பேட்டரி வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம், பொது - தனியார் கூட்டு முயற்சி வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து, மின் வாரியம் பெற உள்ளது.